முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1569 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.6 - தமிழகத்தில் நடைபெற்ற கூட்டுறவுச் சங்கங்களுக்கான மூன்றாம் நிலைத் தேர்தலில் 1569 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையர்  ம.ரா.மோகன், தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :- 

மூன்றாம் நிலைத் தேர்தல் தமிழகத்தில் மூன்றாம் நிலையில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், தமிழ்நாடு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்கிகளின் இணையம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையம் உள்ளிட்ட சங்கங்களுக்கும், பால் வளத்துறை ஆணையரின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் (ஆவின்), மீன்வளத்துறை இயக்குநரின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையம், கைத்தறித் துறை இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ்வரும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கம் (கோ-ஆப்டெக்ஸ்), தமிழ்நாடு கூட்டுறவு நூற்பாலைகளின் இணையம், தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் நூற்பாலை, ஈரோடு, தமிழ்நாடு பனைவெல்ல வளர்ச்சி வாரியத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மாநில பனைவெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிகத்துறை இயக்குநரின் கீழ்வரும் தமிழ்நாடு மாநில கயிறு விற்பனை கூட்டுறவு இணையம், தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் தொழில் கூட்டுறவு விற்பனை இணையம், தமிழ்நாடு தொழிற்கூட்டுறவு ரப்பர் பால் கலந்த கயிறு பொருட்கள் சங்கம், வேளாண்மைத்துறை இயக்குநரின் கட்டுப்பாட்டில் உள்ள 10 வேளாண் பொறியியல் மற்றும் சேவை கூட்டுறவு சங்கங்கள், சர்க்கரைத் துறை இயக்குநரின் கீழ் செயல்படும் தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணையம், பட்டுப்பூச்சி வளர்ப்புத் துறை இயக்குநரின் கீழ் செயல்படும் தமிழ்நாடு கூட்டுறவு பட்டு உற்பத்தியாளர்கள் இணையம், (டான்சில்க்),  வீட்டுவசதி கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம் உள்ளிட்ட மொத்தம் 83 சங்கங்களுக்கு மூன்றாம் நிலையில் தேர்தல் நடைபெறும் என கடந்த 13.06.2013 அன்று கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.  இதற்கான தேர்தல் அட்டவணையும் அன்றே ஆணையத்தால் வெளியிடப்பட்டிருந்தது. ஒரு சங்கத்தில் கலைத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் மீதம் உள்ள 82 சங்கங்களில் வேட்பு மனுத்தாக்கல் 02.07.2013 அன்று நடைபெற்றது. 03.07.2013 அன்று மாலை 4.00 மணி வரை வேட்பு மனுக்கள் திரும்பப் பெற கால அவகாசம் அளிக்கப்பட்டது.

போட்டியின்றி தேர்வு

வேட்பு மனுக்கள் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் முடிவடைந்ததும் 80               சங்கங்களில் 1569 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் 623 பேர் தனி நபர்கள் தொகுதியிலிருந்தும், 946 பேர் சங்க பிரதிநிதிகளுக்கான தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மொத்தம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்- பட்டுள்ள 1569 நிர்வாகக் குழு உறுப்பினர்களில் 295 பேர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இட ஒதுக்கீட்டின் கீழும், 456 பேர் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழும், 818  பேர் பொதுப்பிரிவின் கீழும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

போட்டியுள்ள சங்கங்கள்

மூன்றாம் நிலைத் தேர்தலில் 82 சங்கங்களில் 80 சங்கங்களில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  எனவே மீதமுள்ள 2 சங்கங்களில் மட்டுமே நிர்வாகக் குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தல் நாள்

மூன்றாம்  நிலைத் தேர்தலில் 2 சங்கங்களில் 36 நிர்வாகக் குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 08.07.2013 அன்று நடைபெறவுள்ளது. இதற்காக 77 பேர் களத்தில் உள்ளனர்.

தலைவர் / துணைத்தலைவர் தேர்தல்

மூன்றாம்  நிலைத் தேர்தலில் இடம் பெற்றுள்ள 82 சங்கங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கூடி தங்களுக்குள் தலைவர் / துணைத்தலைவரை தேர்ந்தெடுக்க உள்ளனர். இதற்கான தேர்தல் வரும் 15.07.2013 அன்று நடைபெறவுள்ளது.

பதவியேற்பு

மூன்றாம்  நிலைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் 17.07.2013 புதனன்று பதவியேற்க உள்ளார்கள்.

நான்காம்  நிலைத் தேர்தல்

நான்காம் நிலையில் மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள், கூட்டுறவு அச்சகங்கள், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம்,  தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி உள்ளிட்ட 58 சங்கங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு மாநில தேர்தல் ஆணையர்  ம.ரா. மோகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்