முக்கிய செய்திகள்

பி.எப். வட்டிவிகிதம் 9.5 சதவீதமாக உயர்த்தப்படுமா?

வியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2011      இந்தியா
EPF1

 

புதுடெல்லி, பிப்.24 - தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 9.5 சதவீதமாக உயர்த்தும் பரிந்துரை மத்திய நிதி அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 9.5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தொழிற்சங்கங்களும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் இந்த வட்டி விகிதத்தை 9.5 சதவீதமாக உயர்த்தலாம் என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான மத்திய அறக்கட்டளை வாரியம் சிபாரிசு செய்துள்ளது. இந்த சிபாரிசை மத்திய நிதி அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக மத்திய தொழிலாளர் நலம் மற்றும் வேலை வாய்ப்புதுறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார். 

மத்திய நிதி அமைச்சகம் இதற்கான ஒப்புதலை வழங்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான மத்திய அறக்கட்டளை வாரியத்தின் 190 வது கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தின்போதுதான் இந்த சிபாரிசு குறித்து முடிவு செய்யப்பட்டது. பி.எப். வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி. ருத்ரபானி கோரிக்கை வைத்தார். நீண்டகாலமாக இந்த வட்டி விகிதம் உயர்த்தப்படாதது குறித்து அவர் ஆவேசமடைந்து பேசினார். இந்த வருங்கால வைப்பு நிதி தொழிலாளர்களுக்கும் உழைப்பாளிகளுக்கும்  சொந்தமானது. அவர்கள் பணத்திற்கு உரிய வட்டியை கொடுக்காமல் இழுத்தடிப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறினார். விவசாய தொழிலாளர்களும் இந்த வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப் படுவார்களா என்று பா.ஜ.க. எம்.பி. கேட்டதற்கு அதுகுறித்து அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்: