முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயாநிதி மாறனை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: ஜெயலலிதா

புதன்கிழமை, 15 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி, ஜூன்15 - பிரதமர் மன்மோகன் சிங்குடனான சந்திப்பு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். தமிழக முதல்வர் ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றபின்பு முதன்முதலாக நேற்றுமுன்தினம் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றார். டெல்லியில் முதல்வர் ஜெயலலிதாவை டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித், வலது கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா உள்பட பல முக்கிய பிரமுகர்கள் சந்தித்து பேசினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் ஜெயலலிதா சந்தித்து பேசினார். அப்போது தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசின் உதவி கோரும் மனுவை பிரதமரிடம் ஜெயலலிதா கொடுத்தார். அதை மன்மோகன் சிங் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார். இந்த சந்திப்புக்கு பின்னர் ஜெயலலிதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பிரதமர் மன்மோகன் சிங்குடனான சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தது என்றார். பின்னர் நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு ஜெயலலிதா பதில் அளித்தார். 

அதன்  விபரம் வருமாறு:-

பிரதமர் மன்மோகன் சிங்குடன் சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பிரதமரிடம் தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்த விபரம் அடங்கிய மனு ஒன்றையும் கொடுத்தேன். முதலில் தமிழகத்தில் மின்சார பற்றாக்குறையை போக்க வேண்டும். இதற்கு மத்திய தொகுப்பில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கு உடனடியாக கொடுக்க வேண்டும். வரும் 5 ஆண்டுகளில் தமிழகத்தில் கூடுதலாக 10 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்து நான் முதல்வராகிய சிறிது காலத்திற்குள் தமிழகத்தில் பழுதடைந்திருந்த இரண்டு மின் உற்பத்தி நிலையங்கள் பழுதுபார்க்கப்பட்டு மின்சார உற்பத்தி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு உடனடியாக 1000 மெகாவாட் மின்சாரத்தை மத்திய தொகுப்பில் இருந்து உடனடியாக வழங்க வேண்டும். அது குறித்து தீவிர பரிசீலனை செய்வதாக பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்தார். தமிழக கடல் பகுதியில் உள்ள கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் நடைபெற்ற போரில் சிங்கள ராணுவத்தினரால் பெரும் துயரத்திற்கு ஆளாகி அனாதையாக்கப்பட்டுள்ள தமிழர்களின் தற்போதைய உண்மையான வாழ்வு நிலை எப்படி இருக்கிறது என்பதை கண்டறிய தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் குழு தமிழர்கள் பகுதிக்கு சென்றுவர மத்திய அரசு அனுமதி பெற்றுத்தர வேண்டும். 

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ள மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும். 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை நீதிமன்றம் மீது மக்களிடத்தில் நம்பிக்கை ஏற்படும்படி உள்ளது. தயாநிதி மாறன் ராஜினாமா செய்யாவிட்டால் அவரை பதவியில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் நீக்க வேண்டும். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று நம்புகிறேன். முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு மத்திய அரசு விரைவில் தீர்வுகண்டு அணையில் கூடுதல் தண்ணீரை பெருக்க வழிவகை செய்து கொடுக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணையில் புதிய அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. முல்லைப்பெரியாறு அணை பிரச்சினைக்கு சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எனது அரசு எடுக்கும். சேதுசமுத்திர திட்டத்தில் அ.தி.மு.க. அரசின் கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை. முதலில் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கையே பின்பற்றப்படும். தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மத்திய அரசுடன் சுமூகமான உறவு வைத்துக்கொள்ள விரும்புகிறோம். மத்திய அரசுடன் மோதல் போக்கை நாங்கள் விரும்பவில்லை.  மாநிலங்களுக்கிடையே உள்ள நதிநீர் பிரச்சினைகளுக்கு மத்திய அரசு விரைவாக தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாக தாமதத்தை தவிர்க்கவே ஜார்ஜ் கோட்டையில் தலைமை செயலகம் மாற்றப்பட்டுள்ளது. செயல்படுகிற அரசு புதிய தலைமை செயலகத்தில் இயங்க முடியாது.  தி.மு.க. செய்த சாதனையெல்லாம் நாட்டின் பணத்தை கொள்ளையடித்ததுதான். கடந்த ஆட்சியில் தி.மு.க.வினர் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்தனர். தான் செய்த தவறுகளுக்கான விலையை தி.மு.க. இப்போது கொடுத்துக்கொண்டுள்ளது.  

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார். 

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இன்னும் தி.மு.க. நீடிப்பதால் தாம் சோனியா காந்தியை சந்திப்பது உசிதமாக இருக்காது என்று நிருபர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் முதல்வர் ஜெயலலிதா கூறினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து தி.மு.க.வை நீக்கிவிட்டு அ.தி.மு.க.வின் ஆதரவை கேட்டால் அதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் என்று ஜெயலலிதா சூசகமாக தெரிவித்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தி.மு.க. இருக்கிறது. மேலும் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசிலும் தி.மு.க. இருக்கிறது. இந்தமாதிரியான சூழ்நிலையில் நான் சோனியா காந்தியை சந்திப்பது சரியாக இருக்காது என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறினார். என்னுடைய ஆதரவை யாராவது விரும்பினால் அவர்கள் என்னிடம் நேராக கேட்க வேண்டும். அவர்கள் சார்பாக நீங்கள் (நிருபர்கள்) கேட்கக்கூடாது என்றார். காங்கிரஸ் பலவீனமாக இருப்பதால் அந்த கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள தயங்குகிறீர்களா? என்று ஒரு நிருபர் கேட்டதற்கு ஜெயலலிதா மேற்கண்டவாறு பதில் அளித்தார். சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்றதையொட்டி ஜெயலலிதாவுக்கு சோனியா காந்தி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். அதனால் காங்கிரஸ் -அ.தி.மு.க. இடையே கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து முதல்வர் ஜெயலலிதாவிடம் நிருபர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

அன்னா ஹசாரே போராட்டம் குறித்து கேட்டதற்கு, ஜனநாயகத்தில் ஊழலை எதிர்த்து போராட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு என்றார்.

உங்கள் (ஜெயலலிதா) டெல்லி வருகை காரணமாக தி.மு.க. அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு ஜெயலலிதா நேரடியாக பதில் அளிக்க மறுத்துவிட்டார். இது குறித்து நான் கருத்து எதுவும் கூற விரும்பவில்லை. தி.மு.க. கவலை அடைந்திருப்பதாக நீங்கள்( நிருபர்கள்) கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். அணிமாற்றம் குறித்து முன்கூட்டியே கருத்து கூற இயலாது என்றும் ஜெயலலிதா கூறினார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் வழக்குகள் எதுவும் என்னாலோ அல்லது எனது கட்சியாலோ தொடரப்படவில்லை. அவை அனைத்தையும் செய்தது மத்திய அரசுதான். எனவே இதில் பழிவாங்கும் செயல் என்ற பேச்சுக்கே இடமில்லை. தி.மு.க.வுக்கு எதிரான கிரிமினல் வழக்குகள் தொடர நான் எந்த நிர்பந்தமும் செய்யவில்லை. தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய அரசுதான் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது என்றார். தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தோல்விக்கு பல காரணங்கள் உள்ளன. அனைத்து மட்டங்களிலும் ஊழல், மோசமான நிர்வாகம், ஆட்சியின் அனைத்து பிரிவுகளிலும் ஒரே குடும்பத்தின் ஆதிக்கம், கருத்து சுதந்திரம் பறிப்பு போன்ற பல பிரச்சினைகளால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். ஹிட்லர் ஆட்சியில் இருந்ததுபோல், உகாண்டாவின் இடி அமீன் ஆட்சியில் இருந்தது போல் மக்கள் உணர்ந்தனர் என்றும் ஜெயலலிதா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்