முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயாநிதி மாறன் வீட்டில் இருந்து சன் டி.வி. வரை பைபர் ஆப்டிகல் கேபிள்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்:-ஜெயலலிதா பேட்டி

வியாழக்கிழமை, 7 ஜூலை 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, ஜூலை.- 7 - சென்னையில் உள்ள தயாநிதி மாறன் வீட்டில் இருந்து சன் டி.வி. வரை நான்கு கிலோ மீட்டர் தூரத்துக்கு முறைகேடான முறையில் போடப்பட்டுள்ளதாக கூறப்படும் பைபர் ஆப்டிகல் கேபிள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லியில் முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார். தற்போது ஜவுளித் துறை அமைச்சராக இருக்கும் தயாநிதி மாறன், முன்பு தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது தனது வீட்டில் பி.எஸ்.என்.எல். இணைப்புகளை பெருமளவில் முறைகேடாக பயன்படுத்தி வந்ததாகவும், கிட்டத்தட்ட ஒரு ரகசிய எக்சேஞ்சாகவே அது செயல்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன. மேலும் நூற்றுக்கணக்கான இணைப்புகளை வாங்கி அதை தனது சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான சன் டி.வி சேனல்களுக்கு முறைகேடாக தயாநிதி மாறன் பயன்படுத்தினார் என்பதும் அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டாகும். இது குறித்து மத்திய அரசிடம் சி.பி.ஐ. யும் தெரிவித்துள்ளது. நேற்று சி.பி.ஐ.யால் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையிலும் கூட தயாநிதி மாறன் குற்றவாளி என சந்தேகிக்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது தயாநிதி மாறன் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.  அதாவது, சென்னையில் உள்ள தயாநிதி மாறன் வீட்டில் இருந்து தேனாம்பேட்டையில் இருந்த சன் டி.வி. அலுவலகம் வரை ரகசிய கேபிள்கள் 4 கி.மீ. தூரத்துக்கு செயல்பட்டதாக புதிய குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தயாநிதி மாறன் வீட்டில் இருந்து சன் டி.வி. அலுவலகம் வரை 4 கி.மீ. தூரத்துக்கு இந்த கேபிள் கட்டமைப்பு செயல்பட்டுள்ளது. இதை தனது சகோதரர் கலாநிதியின் சன் டி.வி. சேனல்களுக்காக தயாநிதி மாறன் பயன்படுத்தி உள்ளார் என்று டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள செய்தி கூறுகிறது.  தனது வீட்டில் ரகசிய எக்ஸ்சேஞ்ச் செயல்படவில்லை என்று தயாநிதி மாறன் மறுத்து கூறி வருகிறார். ஆனால் இந்த கட்டமைப்பு ஏன் அமைக்கப்பட்டது என்பது பற்றி அவர் இதுவரை விளக்கமளிக்கவில்லை என்றும் அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
தயாநிதி மாறன் வீட்டில் மொத்தம் 323 தொலைபேசி இணைப்புகள் செயல்பட்டதாகவும்,  அவை சட்டவிரோதமாக பைபர் ஆப்டிகல் மூலம் சன் டி.வியுடன் இணைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சன் டி.வி. வரை பூமியை தோண்டி இந்த பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து சி.பி.ஐ ஆய்வு நடத்தி வருகிறதாம். இந்த இணைப்பகம் குறித்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் விளக்கமும் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று டெல்லி சென்றார். திட்டக் குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் தயாநிதி மாறன் வீட்டில் இருந்து சன் டி.வி. வரை பைபர் ஆப்டிகல் கேபிள் அமைக்கப்பட்டது பற்றி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், இந்த விஷயம் குறித்து மீடியாவில்தான் பார்த்தேன். இன்று நான் பிசியாக இருக்கிறேன். எனவே நான் சென்னை திரும்பியதும் அது பற்றி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பதிலளித்தார். சென்னையில் ராணுவ வீரரால் சிறுவன் சுடப்பட்டு பலியானது பற்றி கேட்கப்பட்ட போது, சம்பந்தப்பட்ட நபரை ராணுவத்தினர் ஒப்படைக்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தினார். பின்னர் திட்டக்குழு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.
அப்போது தமிழ்நாட்டுக்கு அவர் கோரியதை விட கூடுதலாகவே நிதி ஒதுக்கப்பட்டது. அதாவது, தமிழகத்துக்கு ரூ. 23 ஆயிரத்து 535 கோடி ஒதுக்கப்பட்டது. இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்தார். கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு நேற்றிரவே அவர் சென்னை திரும்பினார். முன்னதாக, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்