ஷீலா தீட்சித் பதவி விலக நிதின் கட்காரி கோரிக்கை

Image Unavailable

 

குவஹாத்தி, ஆக.7 - காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஏற்பாடுகள் தொடர்பான மத்திய கணக்கு தணிக்கைக் குழு அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நிதின்கட்காரி கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்த விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதையடுத்து இந்த விளையாட்டுப் போட்டியின் அமைப்பாளர் சுரேஷ் கல்மாடி கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த நிலையில் இந்த விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகள் குறித்து மத்திய கணக்கு தணிக்கைக் குழு நேற்று முன்தினம் ஒரு அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளில் பல ஆயிரம் கோடிக்கு முறைகேடுகள் நடந்துள்ளன என்றும் இதற்கு போட்டி அமைப்பாளர் சுரேஷ் கல்மாடி மற்றும் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆகியோரே பொறுப்பு என்றும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ள ஷீலா தீட்சித் தனது முதல்வர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய  வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி கோரிக்கை விடுத்துள்ளார். அசாம் தலைநகர் குவகாத்தியில் நிதின் கட்காரி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் சுரேஷ் கல்மாடி ரூ. 12 ஆயிரம் கோடிக்கு முறைகேடு செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் ரூ. 20 ஆயிரம் கோடிக்கு ஊழல் செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார். 

மத்திய  கணக்கு தணிக்கைக் குழு இடித்துரைத்தும் கூட தாங்கள் தவறு செய்யவில்லை என்று டெல்லி மாநில அரசு கூறியுள்ளது. இது காங்கிரஸ் கட்சியின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது. அரசியல் சாசனத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள மத்திய கணக்கு தணிக்கைக் குழுவே நேரடியாக இந்த குற்றச்சாட்டை கூறியுள்ள போதிலும் தாங்கள் தவறு எதையும் செய்யவில்லை என்று டெல்லி மாநில அரசு எப்படி கூற முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். முறைகேட்டில் நேரடியாக தொடர்புடைய  ஷீலா தீட்சித் முதல்வர் பதவியில் தொடர்ந்து நீடிக்க எந்த விதமான தார்மீக உரிமையும் கிடையாது. எனவே அவர் தனது பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

ஷீலா தீட்சித் பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க. வைத் தொடர்ந்து இடதுசாரி கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன. ஆனால் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜனார்தன் திவேதி தெரிவிக்கையில் கணக்கு தணிக்கைக் குழு ஊழல் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கு ஆன செலவை குறைத்திருக்கலாம் என்றுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர் பதவி விலக தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். 

ஆனால் இந்த பிரச்சனையை பாராளுமன்றத்தில் எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் உயர்மட்ட குழு கூட்டத்தை பிரதமர் மன்மோகன்சிங் நேற்று அவசரமாக கூட்டி ஆலோசனை நடத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ