சமச்சீர் புத்தகங்கள் தாமதம் இல்லாமல் வழங்கப்படும்

Image Unavailable

 

சென்னை, ஆக.10 - சமச்சீர் கல்வி திட்டத்திற்கான பாடப்புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன. இவை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே வழங்கப்பட்டுவிடும் என பள்ளி கல்வித்துறை இயக்குனர் வசுந்தராதேவி கூறினார். சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. 1 முதல் 10​ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வியை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.  இந்த தீர்ப்பின் மூலம் பள்ளிக் கல்வி துறையில் கடந்த 2 1/2 மாதமாக நிலவி வந்த குழப்பத்திற்கு நேற்று தீர்வு ஏற்பட்டது. ஜூன் மாதம் பள்ளி தொடங்கியது முதல் இதுவரை மாணவர்களுக்கு எந்த பாடத்திட்டத்தை கற்றுக்கொடுப்பது என்று தெரியாமல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் குழப்பத்தில் இருந்தன. இந்த நிலையில் சமச்சீர் கல்வியை உடனே அமல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதை தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை சமச்சீர் புத்தகங்களை வினியோகம் செய்யும் பணியை தொடங்க முடிவு செய்துள்ளது. இது பற்றி பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் வசுந்தரா தேவி கூறியதாவது:​

சமச்சீர் கல்வி திட்டத்திற்கான பாடப்புத்தகங்கள் அனைத்தும் தயாராக இருக்கின்றன. அந்தந்த மாவட்ட மையங்களில் புத்தகங்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டு வினியோகத்திற்கு தயாராக உள்ளன. 1 முதல் 10​ம் வகுப்பு வரை உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு உடனே பாடப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக தமிழ்நாடு பாடநூல் நிறுவன நிர்வாக இயக்குனரை சந்தித்து பேசுகிறேன். மாணவர்களுக்கு தாமதம் இல்லாமல் புத்தகங்கள் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். 10 நாட்களுக்குள் புத்தகம் வழங்க வேண்டும் என்று கோர்ட்டு கூறியிருந்தாலும் அதற்கு முன்னதாகவே புத்தகங்களை வினியோகம் செய்து விடுவோம். 

இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ