முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூர் - விருத்தாச்சலம் வட்டாரப்போக்குவரத்து மற்றும் ஓட்டுநர் தேர்வு தளம்- ஜெயலலிதா

சனிக்கிழமை, 12 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ.- 12 - அரியலூர் - விருத்தாச்சலம் ஆகிய இடங்களில் வட்டாரப்போக்குவரத்து மற்றும் ஓட்டுநர் தேர்வு தளம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை விபரம் வருமாறு:-  பெருமளவில் பெருகிவரும் வாகனங்களினால் போக்குவரத்து துறை, தனது செயல்பாட்டில் புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.  எனவே, அனைத்து அலுவலகங்களையும் கணினிமயமாக்குதல், புதிய அலுவலகங்களை உருவாக்குதல், போக்குவரத்து அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டடம் கட்டுதல் ஒட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் பெறுவதற்கான நடைமுறைகளை பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் எளிதாக்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. இந்த வகையில், பொது மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்ற வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டடங்களைக் கட்டவும், ஒட்டுநர் உரிமம் வழங்குவதற்கான தேர்வுத்தளம் அமைக்கவும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின்
தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது. இதன்படி, அரியலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் விருத்தாசலம், காங்கேயம் ஆகிய இடங்களில் உள்ள பகுதி அலுவலகங்களுக்கு இந்த ஆண்டு சொந்தக் கட்டடங்கள் கட்டப்பட தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதே போன்று, அரியலூர் மற்றும் செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கும், விருத்தாசலம் மற்றும் குளித்தலை ஆகிய இடங்களில் உள்ள பகுதி அலுவலகங்களுக்கும் ஒட்டுநர் தேர்வுத்தளங்களை இந்த ஆண்டு அமைத்திட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அரியலூர் மாவட்டம், கீழப்பழவூர் கிராமத்தில் அரியலூர் மாவட்டத்திற்கான வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கட்டப்படும். இந்த அலுவலக கட்டடத்திற்காகவும், ஒட்டுநர் தேர்வுத்தளம் அமைக்கவும் 1 கோடியே 82 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் அனுமதித்து  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார். 12,237 சதுர அடி பரப்பளவில் இந்த புதிய கட்டடம் அமையப் பெறும்.  கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் பெரியவடவாடி கிராமத்தில் விருத்தாச்சலம் பகுதி அலுவலகத்திற்கு சொந்தக் கட்டடம் கட்டப்படும். இங்கு ஒட்டுநர் தேர்வுத்தளம் ஒன்றும் அமைக்கப்படும். இந்த புதிய கட்டடத்தில் பரப்பு, 5387 சதுர அடி ஆகும். இந்தக் கட்டடம் மற்றும் தேர்வுத் தளத்திற்கு 1 கோடியே 44 லட்சத்து 8 ஆயிரம் அனுமதித்து  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
காங்கேயம் பகுதி அலுவலகத்திற்கு சொந்தக் கட்டடம் 5387 சதுர அடி பரப்பளவில் கட்டப்படும். இதற்காக 77 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயை அனுமதித்து  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்.  மேலும் செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு ஓட்டுநர் தேர்வு தளம் அமைத்திட 1 கோடியே 39 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் அனுமதித்தும், குளித்தலை பகுதி அலுவலகத்திற்கு ஓட்டுநர் தேர்வு தளம் அமைத்திட 20 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் அனுமதித்தும்  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்திரவிட்டுள்ளார். அரியலூர், விருத்தாச்சலம், ஆகிய இடங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் ஓட்டுநர் தேர்வுதளம் அமைக்கப்படுவதாலும், காங்கேயம் பகுதிக்கு சொந்தக் கட்டடம் அமைக்கப்படுவதாலும், செங்குன்றம், குளித்தலை, ஆகிய இடங்களில் ஓட்டுநர் தேர்வு தளம் அமைக்கப்படுவதாலும், இந்தப் பகுதி மக்கள் போக்குவரத்து உரிமங்கள் எளிதில் பெற்றிட இயலும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!