டெல்லி தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு

Image Unavailable

புதுடெல்லி, நவ. - 22 - டெல்லியில் நடந்த தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.  2 லட்சம் நஷ்ட ஈடு வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் கூறியுள்ளார். டெல்லியில் வட கிழக்கு பகுதியில் உள்ள நந்த் நகரி என்ற இடத்தில் ஒரு சமுதாய கூடத்தில் அரவாணிகள் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உடல் கருகி பலியானார்கள். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்து ஜிடிபி. மருத்துவ மனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சிகிச்சை பெற்று வருபவர்களை  டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் நேற்று நேரில் பார்த்துத ஆறுதல் கூறினார். அவருடன் டெல்லி சுகாதார துறை அமைச்சர்  ஏ.கே. வாலியாவும்  ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஷீலா தீட்சித் இந்த தீவிபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நஷ்ட ஈடு வழங்கப்படும் என்று அறிவித்தார். படுகாயம் அடைந்தவர்களுக்கு  தலா ரூ. 50,000 மும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 5,000 மும் வழங்கப்படும் என்றும் அவர்  கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். போதுமான முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்படாததால்தான் இந்த விபத்து நடந்துள்ளதாகவும் அதனால்  அந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணைக்கு டெல்லி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ