முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிறிஸ்தவர்கள் ஜெருசலேமுக்கு புனித யாத்திரை செல்ல நிதி உதவி

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, டிச.- 26 - தமிழக முதல்வர் ஜெயலலிதா கிறிஸ்துமஸ் விழாவில் அறிவித்தபடி, கிறிஸ்துவர்கள் ஜெருசலேம் செல்ல நிதி உதவிக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 500 கிறிஸ்துவர்கள் ஜெருசலேம் செல்ல ரூ.1 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இஸ்லாமிய மக்களின் ஹஜ் புனிதயாத்திரைக்கு அரசு உதவி செய்வதைப் போன்று, கிறிஸ்துவ மக்கள் மேற்கொள்ளும் ஜெருசலெம் புனித யாத்திரைக்கும் அரசு உதவி செய்யவேண்டும் என்று கிறிஸ்துவ சமுதாயத்தினர் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
20.12.2011 அன்று சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா  இது குறித்து ஏற்கெனவே தான் அளித்த வாக்குறுதியை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலமான ஜெருசலேம் சென்று வருவதற்கு அரசு நிதி உதவி அளிக்கும் என்றும், இத்திட்டம் அனைத்து கிறிஸ்துவப் பிரிவினரையும் உள்ளடக்கியதாக அமையும் என்றும், முதற்கட்டமாக 500 கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் சென்று வர ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிவித்தார். இத்திட்டம் தொடர்பாக சிறுபான்மையினர் நல ஆணையரிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டதில், இஸ்ரேல் ஏர்லைன் நிறுவனத்தினரால் மும்பையிலிருந்து அம்மான் வழியாக இஸ்ரேலுக்கு சென்று வர இரு வழி விமானக் கட்டணங்களாக ரூ.32,640/​ அல்லது ரூ.35,524/​ வசூலிக்கப்படுகின்றன என்றும், சென்னையிலிருந்து மும்பை சென்று வர தனியார் விமான நிறுவனங்கள் ரூ.12,000/​ வரை கட்டணம் வசூலிக்கின்றன என்றும், எனவே சென்னையிலிருந்து ஜெருசலேம் சென்று வர இரு வழி பயணக் கட்டணம் மட்டும் ரூ.45,000/​ முதல் ரூ.47,000/​ வரை வசூலிக்கிறார்கள் என்றும் சிறுபான்மையினர் நல ஆணையர் தெரிவித்துள்ளார். மேற்சொன்ன குறிப்புகளின் அடிப்படையில் கிறிஸ்தவர்கள் இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் செல்வதற்காக பயணி ஒருவருக்கு விமானக் கட்டண உதவித்தொகையாக ஹஜ் புனிதப் பயணத்திற்காக இஸ்லாமியர்களுக்கு மத்திய அரசு அதனுடைய நிதித் தொகுப்பிலிருந்து வழங்குவது போன்று, தமிழக அரசு தனது நிதியிலிருந்து ரூ.20,000/​ முதல் ரூ.24,000/​ வரை வழங்கலாம் என்றும், இந்த பயணக் கட்டண உதவித்தொகை ஜெருசலேம் புனிதப் பயணத்தை ஏர் இந்தியா மற்றும் இஸ்ரேல் ஏர் விமான சேவைகளின் மூலம் மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கு மட்டுமே பொருந்துமாறு செய்யலாம் என்றும், இதற்கென முதற்கட்டமாக 1000 நபர்களுக்கு ரூ.2 கோடி மாநில அரசின் நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யலாம் என்றும், சிறுபான்மையினர் நல ஆணையரகத்தின் மூலம் இது குறித்து விளம்பரம் செய்து விண்ணப்பங்களைப் பெற்று பரிசீலித்து குலுக்கல் முறையில் பயணிகளைத் தேர்வு செய்யலாம் என்றும் சிறுபான்மையினர் நல ஆணையர் பரிந்துரை செய்துள்ளார். மேலும், இப்பணிகளை ஒருங்கிணைப்பதற்கு எதிர்காலத்தில் கிறிஸ்தவர்களுக்கான புனிதப் பயணக் குழு ஒன்றினை ஏற்படுத்தலாம் எனவும் பரிந்துரைத்துள்ளார். சிறுபான்மையினர் நல ஆணையரின் கருத்துருவினை அரசு நன்கு ஆய்வு செய்தது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிறிஸ்தவப் பிரிவினரும் இஸ்ரேலில் உள்ள புனித ஸ்தலமான ஜெருசலேம் சென்று வர அரசு நிதி உதவி அளிக்கும் புதிய திட்டம் ஒன்றினைச் செயல்படுத்த அரசு முடிவு செய்து அவ்வாறே ஆணையிடுகிறது. முதற்கட்டமாக 2011​2012 ஆம் ஆண்டில் 500 கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் சென்று வருவதற்கு பயணிகளைத் தேர்ந்தெடுத்து, ஒரு பயணிக்கு ரூ.20,000/​ (ரூபாய் இருபதாயிரம் மட்டும்) வீதம் 500 பயணிகளுக்கு நிதியுதவி வழங்க மொத்தம் ரூ.1,00,00,000 (ரூபாய் ஒரு கோடி மட்டும்) அரசு ஒப்பளிப்பு செய்து ஆணையிடுகிறது. ஜெருசலேம் புனிதப் பயணத்திற்கு நிதி உதவி வழங்கும் இத்திட்டம் குறித்து விளம்பரம் செய்து விண்ணப்பங்களைப் பெற்று பரிசீலித்து பயணிகளைத் தேர்வு செய்யும் பணியினை மேற்கொள்ளுமாறு சிறுபான்மையினர் நல ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.இது ஒரு புதுப்பணி குறித்த செலவினமாகும். நாளடைவில் இதற்கு சட்டமன்றப் பேரவையின் ஒப்புதல் பெறப்படும். சட்டமன்றப் பேரவையின் ஒப்புதல் கிடைக்கும் வரையில் எதிர்பாராச் செலவு நிதியிலிருந்து இச்செலவினம் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்