முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நக்கீரன் கோபால் மீது நடவடிக்கை கோரி ஆர்.பி.உதயகுமார் புகார்

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

சாத்தூர்,ஜன.- 9 -முன்னாள் அமைச்சரும், சாத்தூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.பி.உதயகுமார் போலீஸ்  துணை கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை நேரில் சென்று கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது; கழக நிரந்தர பொதுச்செயலாளர் இந்தியத்திருநாட்டின் வழிகாட்டி உலகத்தை ஆளுகின்ற ஆற்றல் கொண்டிருக்கின்ற தமிழக முதல்வர், தமிழக மக்களின் காவல் தெய்வம், வாழும் மனித தெய்வம் தமிழக மக்களின் நலனுக்காக தன்னையே அர்ப்பணித்து பணியாற்றி வருகின்ற மக்கள் தலைவி மூன்றாவது முறையாக அன்னைத் தமிழகத்தின் முதலமைச்சராக ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஆதரவால் அரியணையில் அமர்ந்து புனித ஆட்சி நடத்தி வருகின்ற தெய்வத்தலைவி புரட்சித்தலைவி அம்மா அவர்களின் புகழுக்கும் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்க வேண்டுமென்ற கெட்ட எண்ணத்தோடு கடந்த 7.1.2012 -ம் தேதியிட்டு வெளிவந்திருக்கின்ற நக்கீரன் இதழில் 5-வது பக்கத்தில் இரண்டாவது பாராவில் நித்தம் நாங்கள் போற்றி வணங்குகின்ற இதயதெய்வம் தமிழக முதல்வர் அம்மாபுரட்சித்தலைவி அவர்களைப்பற்றி மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவர் சொன்னதாகக் கீழ்க்கண்ட வார்த்தைகளான நீங்க அம்முவை பிராமின்னு நினைக்கிறீங்களா? பிராமின்னா குழைஞ்சு குழைஞ்சு பேசி காரியம் சாதிப்பாங்க அம்மு எதையும் பட்பட்டுன்னு நேரில் பேசிடும் அப்புறம் இங்கே இருக்கிற நீங்கயாரும் மாட்டுக்கறி சாப்பிட்டிருக்க மாட்டீங்க. ஆனா அம்மு ஸ்பென்சரிலிருந்து ஸ்பெஷல் பீப் வாங்கி எனக்கு சமைச்சு கொடுத்திருக்கு.  நான் தான் பழக்கமில்லாததால் அதைச்சாப்பிடலை. மாட்டுகறி சாப்பிடுகிற அம்முவை எப்படி  பிராமின்னு நினைக்கிறீங்கன்னு சொன்னார் என்று வெளியிட்டுள்ளனர். மேற்சொன்னை அந்த வாசகங்களைப் படித்த எனக்கும் எண்ணிலடங்காத சாத்தூர் தொகுதி கழக நிர்வாகிகளுக்கும்,  கழகத் தொண்டர்களுக்கும்,  சாத்தூர் தொகுதி மக்களுக்கும் மிகுந்த மனவேதனையும், மன அமைதியின்மையும் ஏற்படுத்தியுள்ளது.  இவ்வாறு தவறான தகவல்களை பொய்யாக பரப்புரை செய்து சமுதாயத்தின் அமைதியின்மையும், சமுதாயத்தினரிடைய வெறுப்புணர்வும் மற்றும்  சமுதாய நல்லிணக்கத்தையும் சீர்குலைய செய்திட்ட நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது தக்க நடவடிக்கை எடுத்தும், மேலும் நக்கீரன் இதழின் விற்பனையை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அந்த புகார் மனுவில் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ.  கூறியுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்