முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நோய் எதிர்ப்பு மருந்து

நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதை குணப்படுத்த நேரடி மருந்து மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தி (ஆன்டிபயாடிக்) மருந்துகளையும் வழங்குவது வழக்கம். இது கிருமிகள், பாக்டீரியாக்களை கொன்று நோயை குணப்படுத்தும். வருங்காலத்தை கருத்தில் கொண்டு விஞ்ஞானிகள் புதிய நோய் எதிர்ப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். ஏற்கனவே வான்கோமைசின் என்ற நோய் எதிர்ப்பு மருந்து புழக்கத்தில் இருந்தது. அந்த மருந்தால் இப்போது பலன் இல்லை. இதே மருந்தை மேலும் வீரியப்படுத்தும் வகையில் ஆய்வு செய்தனர். அதில் புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து 1000 மடங்கு சக்தி கொண்டதாக இருக்கிறது. எனவே கிருமிகளால் உருவாகும் அனைத்து நோய்களையும் இது கட்டுப்படுத்துமாம்.

பெண்களை விட ஆண்கள் நிறக்குருடர்கள்

இந்த உலகை வண்ண மயமாகவும், அதன் 8 பரிமாணங்களுடனும் காணும் காட்சிதான் உள்ளத்துக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. ஆனால் அறிவியல் உள்ளத்தை பார்க்காது. உண்மையை மட்டும்தான். அப்படி பார்த்த போது ஒரு ஆச்சரியப்படும் செய்தி தெரியவந்தது. அது என்னவென்றால் பெண்களை காட்டிலும் ஆண்கள் சற்றே நிறக்குருடர்கள் என்பதுதான் அது. அதாவது பெண்களை காட்டிலும் நிறங்களை உணர்ந்து கொள்வதில் ஆண்கள் சற்று குறைச்சல்தான். இதற்கு அவர்களது மரபணுவில் காணப்படும் எக்ஸ் குரோமோசோம்தான் காரணம் எனச் சொல்லப்படுகிறது, பெண்களுக்கு 2 எக்ஸ் குரோமோசோம்கள் இருப்பதால் ஒன்றின் குறைபாட்டை மற்றது சரி செய்து விடுமாம். ஆனால் பாவம் ஆண்களுக்கு இருக்கும் ஒரு எக்ஸ் குரோமோசோமும் மக்கர் பண்ணினால், உலகம் கருப்பு  வெள்ளையாகத்தான் தெரியுமாம். என்ன கொடுமை சார் இது..

நெட்வொர்க் இல்லையா ?

நெட்வொர்க் இல்லாமல் லிபான் ஆப் மூலம் நீங்கள் தொடர்பு கொண்டு பேச முடியும். முதலில் உங்கள் மொபைலில் லிபான் ஆப்பை டவுன்லோடு செய்யவும். பிறகு அதில் ரீச் மி என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டு இருக்கும். அதனை கிளிக் செய்யவும். பிறகு இதில் இருந்து நீங்கள் நெட்வொர்க் இல்லாமல் கால் செய்து கொள்ளலாம்.

சடலத்துடன் நடனமாடும் சடங்கு

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு இனக்குழுக்களிடமும் விதவிதமான சடங்கு சம்பிரதாயங்கள் காணப்படுகின்றன. அதில் மடகாஸ்கரில் உள்ள மலகாசி பழங்குடியினர் ஃபமதிஹானா என்ற ஒரு வித்தியாசமான இறுதிச்சடங்கு பழக்கவழக்கத்தை வைத்திருக்கிறார்கள். இவர்கள் அடக்கம் செய்யப்பட்ட தங்களுடைய மூதாதையர்களை 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல்லறையிலிருந்து வெளியே எடுப்பார்கள். அவர்கள் உடலில் இருக்கக்கூடிய பழைய துணிகளை அகற்றிவிட்டு மீண்டும் புதிய துணியை போர்த்தி தலைக்கு மேலே வைத்து கல்லறையை சுற்றி நடனம் ஆடுகிறார்கள். இறந்தவர்களை போர்த்திய புதிய துணியில் அவர்களுடைய பெயரை எழுதுகிறார்கள். இதற்கு காரணம் அந்த பெயர் எப்பொழுதும் அவர்களுடைய நினைவில் இருக்க வேண்டும் என்பதற்காகவாம். இறந்தவர்களுடைய ஆவியானது மூதாதையர்களின் உலகில் இணைகிறது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கத்தை அவர்கள் வைத்துள்ளார்கள். இது ஒவ்வொரு ஐந்து முதல் ஏழு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறதாம். கேட்கவே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா..

இனி தண்ணீரை குடிக்க வேண்டாம் - அப்படியே மென்று சாப்பிடலாம்

எதிர்காலத்தில் நாடுகளுக்கு இடையே நல்ல தண்ணீரை பகிர்ந்து கொள்வதில்தான் மிகப்பெரிய சவால்கள் அடங்கியுள்ளதாக அடிக்கடி சூழலியலாளர்கள் எச்சரித்து வருகின்றனர். தற்போது பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரால் நமக்கு பயன் என்றாலும் பாவம் பூமி பந்து படாத பாடு படுகிறது. தற்போது அதற்கு முடிவு கட்ட வந்து விட்டது Ooho water.  லண்டனை மையமாக வைத்து இயங்கி வரும் ஸ்கிப்பிங் ராக்ஸ் லேப் என்ற ஆய்வகம் கடற்பாசி மற்றும் தாவரங்களை பயன்படுத்தி திட வடிவிலான தண்ணீரை கண்டுபிடித்துள்ளது. இதனால் தண்ணீரை பாட்டிலில் அடைக்க வேண்டிய தேவை இருக்காது. மேலும் தாகம் எடுக்கும் போது இதை அப்படியே எடுத்து மெல்ல வேண்டியதுதான். பார்ப்பதற்கு நிறமற்ற நம்மூர் ஜவ்வுமிட்டாய் போல காணப்படும் இந்த Ooho வாட்டர் வாயில் போட்டதும் அப்படியே கல்கண்டாய் கரைந்து விடுகிறது. இயற்கையான முறைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படுவதால் மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தில்லை என்பது இதன் கூடுதல் சிறப்பு.

மாதுளை நன்மை

இதயத்திற்கு வலுசேர்க்கும் மாதுளை எளிதில் ஜீரணமாகும் பழம். இதன் தோல், இலை, பூ, காய், வேர், விதை போன்ற அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. உடலில் ஏற்படும் சோர்வு நீங்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், ஈரலின் செயல்பாட்டிற்கும் ஏற்றதாக இது இருக்கிறது. ஈரலில் வைட்டமின் ஏ-யை சேகரிக்கும் ஆற்றல் அதிகரிக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்