முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்: வாழ்த்துகளை பரிமாறிக் கொண்ட இஸ்லாமியர்கள்

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2024      ஆன்மிகம்
Ramzan-2024-04-11

சென்னை, தமிழ்நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு காலையிலேயே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

ஈகைப் பெருநாளான ரமலான் பண்டிகை நேற்று (ஏப். 11) கொண்டாடப்படுவதாக அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் அறிவித்திருந்தார். அந்த வகையில், தமிழ்நாட்டில் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.  மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். 

ரம்ஜான் பண்டிகையையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். ஈத்கா மைதானத்தில் நடந்த சிறப்பு தொழுகையில் பல்லாயிரணக்காண இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். டெல்லி உள்பட இந்தியாவின் பிற இடங்களில் அதிகாலையிலேயே பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மசூதிகளில் கூடி சிறப்பு தொழுகை நடத்தினர்.

அதேபோல், தமிழ்நாட்டில், பல இடங்களில் மசூதிகளில் இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகை நடத்தினர். சென்னை பிராட்வே டான் பாஸ்கோ பள்ளி மைதானத்தில் 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகையில் பங்கேற்று, வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

திருச்சி பாலக்கரை அரசு சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர். தொழுகை நடத்திய இஸ்லாமிய சகோதரர்களை மதிமுக வேட்பாளர் துரை வைகோ, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சந்தித்து ரமலான் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள இஸ்லாமிக் பள்ளியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒரே இடத்தில் கூடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

சேலம் ஜாகிர் அம்மாபாளையம் ஈக்தா மைதானத்தில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த எலவனாசூர் கோட்டை ஈத்கா மைதானத்தில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்று கூடி தொழுகையில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கடற்கரையில் தவ்ஹூத் பேரவை சார்பில் நடைபெற்ற ரமலான் சிறப்பு தொழுகையில் 1500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகையில் கலந்துகொண்டு அன்பை பறிமாறிக்கொண்டனர்.

தென்காசி மாவட்டம் வடகரையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். தொழுகைக்கு முன்பாக ஏராளமான முஸ்லிம்கள் ஒரு கி.மீ ஊர்வலமாக ஈத்கா மைதானத்துக்கு வந்தனர். வடகரையில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகைக்கு புத்தாடை அணிந்து வந்து ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.  மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறையில் உள்ள முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் ஏராளமான இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து இளைஞர்கள் தங்களது நீண்ட நாள் நண்பர்களை சந்தித்ததை அடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டு ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதேபோல் தமிழகத்தின் இதர மாவட்டங்களிலும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து