முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவை தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2024      உலகம்
Canada 2024-04-15

Source: provided

ஒட்டாவா : அமெரிக்காவை தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்று கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை கனிசமான அளவு உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு கல்வி பயில அதிகளவு மாணவர்கள் செல்கின்றனர்.    

இந்த நிலையில் சமீப காலமாக வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்கள் தாக்குதலுக்குள்ளாவது, கொலை செய்யப்படுவது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் கடந்த சில மாதங்களாக இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நடப்பு ஆண்டில் தொடக்கத்தில் இருந்து இதுவரை 11 இந்திய மாணவர்கள் மற்றும் இந்திய வம்சாவளி மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் புள்ளி விவரங்களின்படி கடந்த 2018லிருந்து இதுவரை 403 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 36 மாணவர்கள் அமெரிக்காவில் மட்டும் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

தற்போது அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை கனடாவில் உள்ள தனியார் பல்கலைகழகத்தில் எம்பிஏ படிக்கும் மாணவரான சிராக் அண்டில் தனது காரிலேயே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 24வயதான மாணவரான சிராக் அண்டில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 2022ம் ஆண்டு தனது மேற்படிப்பிற்காக கனடா வந்துள்ளார்.

சோனிபட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட மாணவரான சிராக்கின் சகோதரர் ரோமித் தனது சகோதரர் மரணம் குறித்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது..

“ எனது சகோதரர் மரணிப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு என்னிடம் தொலைபேசியில் உரையாடினார். தனது அன்றாட வேலைகளை முடித்துவிட்டு தனது ஃபிளாட்டின் பின்புறத்தில் உள்ள கார் பார்க்கிங்கில் இருந்துதான் எனக்கு தொலைபேசியில் பேசினார். தனது நண்பர்களுடன் வெளியில் செல்ல உள்ளதாக தெரிவித்துவிட்டு மகிழ்ச்சியாக போனை கட் செய்தார். அதன் பின்னர் 30 நிமிடஙகள் கழித்து சிராக் மரணித்து விட்டதாக செய்திகள் கிடைத்தது” என சோகத்துடன் பகிர்ந்துள்ளார்.

இதுவரை காவல்துறை தரப்பில் எந்தக் கைதும் நடைபெறவில்லை எனவும் அருகில் இருக்கும்  வீடுகளின் சிசிடிவி கேமராக்களை கேட்டால் கூட அவர்கள் ஒத்துழைப்பு தர மறுப்பதாகவும் சிராக்கின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர். 

இதுவரை சிராக் குடும்பத்தில் வழக்கு மற்றும் மத்திய மாநில அரசை நேரடியாக அணுகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.  ஆனால் இந்திய மாணவரான சிராக்கின் உடலை இந்தியா கொண்டு வர முயற்சித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து