முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2024      இந்தியா
Baba-Ramdev 2024-04-16

புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் 'பதஞ்சலி' நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. கடந்த மாதம் 'பதஞ்சலி' நிறுவனம் மீது தவறான விளம்பரங்கள் வெளியிடுவதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதஞ்சலி விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடக்கூடாது என்று எச்சரித்த சுப்ரீம் கோர்ட், பதிலளிக்க கோரி அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து நோட்டீசுக்கு பதிலளிக்காததால், அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவை நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

வழக்கு தொடர்பாக ஏற்கனவே பிரமாண பத்திரம் தாக்கல் செய்த நிலையில் யோகா குரு ராம்தேவ் கடந்த 2-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜரானார். அப்போது, பிரமாண பத்திரம் திருப்தி அளிக்கவில்லை என நீதிபதிகள் அதிருப்தியை தெரிவித்தனர். ராம்தேவ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இருவரும் தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளனர். நீதிமன்றம் என்ன சொன்னாலும் அதை செய்ய தயாராக இருக்கிறோம் என்றார். மன்னிப்பு என்ற பெயரில் எதையாவது எழுதி கொடுத்துவிட்டு தப்பித்து விடலாம் என நினைக்காதீர்கள் என பாபா ராம்தேவ் தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், நீங்கள் செய்திருப்பது மிக தீவிரமான நீதிமன்ற அவமதிப்பு செயல், மன்னிப்பு என்ற பெயரில் எதையாவது எழுதிக் கொடுத்துவிட்டு தப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் காட்டத்துடன் தெரிவித்தனர். அத்துடன், புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய இருவருக்கும் ஒரு வாரம் அவகாசம் அளித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தனர்.

இதனை தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை கடந்த 16ம் தேதி மீண்டும் நடைபெற்றது. அப்போது எங்களுடைய கருத்துகள், செய்த தவறுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க வேண்டும் என்று பாபா ராம்தேவ், ஆச்சார்யா பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தனர். அப்போது குறுக்கீட்ட நீதிபதிகள் மற்ற மருந்து முறைகளை இழிவுபடுத்த அதிகாரம் வழங்கியது யார்?; நிரூபணமற்ற அலோபதி மருந்து விளம்பரங்களை எங்காவது பார்த்துள்ளீர்களா? என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து விளம்பரங்களை வெளியிடுவதில் மாற்றங்கள் செய்வதாக பதஞ்சலி தரப்பில் உத்தரவாதம் அளித்த நிலையில், பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணன் ஆகியோர் பொது மன்னிப்பு கோர உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 23ம் தேதிக்கு (அதாவது நேற்று) ஒத்திவைத்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டு பாபா ராம்தேவ் பொது மன்னிப்புக் கோரினார். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது நாளிதழ்களில் வெளியிடப்பட்ட பொதுமன்னிப்பு கோரும் விளம்பர நகலை பதஞ்சலி நிறுவன வழக்கறிஞர் தாக்கல் செய்தார். அதனை பார்த்த நீதிபதிகள் மன்னிப்பு கோரும் விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு சிறிதாக உள்ளது என்றும் பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்களை இது போன்ற சிறிய அளவில்தான் வெளியிடுவீர்களா? என்று கேள்வி எழுப்பினர். பொருளை விளம்பரப்படுத்துவது போல, மன்னிப்பும் மிகப்பெரிய அளவில் புதிய விளம்பரமாக வெளியிட்டு அதை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து