முக்கிய செய்திகள்

மண் பரிசோதனை மூலம் மண்ணின் பயிரை தேர்ந்தெடுத்து அதிக மகசூல் பெறலாம்

புதன்கிழமை, 17 மே 2017      வேளாண் பூமி
maxresdefault

Source: provided

சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையில் சார்பில் வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மண்வள இயக்கம்  குறித்து கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், காவேரிபுரம் பகுதிகளில்  செய்தியாளர் பயணம் கலெக்டர் வா.சம்பத்,  தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் கலெக்டர்  தெரிவித்ததாவது.

தமிழக அரசு விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் விவசாய பெருமக்கள் உற்பத்தி அதிகரித்து அதிக லாபம் பெற வேண்டும் என்ற நோக்கில் மண் இயக்கம் என்ற திட்டம் வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பயிர் வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவைகளாக மண்வளமும், நீர்வளமும் அமைகிறது.   மண்ணில் உள்ள சத்துக்களின் அளவையும், மண்ணின் இரசாயனத் தன்மைககளயும் மண் ஆய்வின் மூலமே அறிய முடியும்.   மண்ணில் உள்ள சத்துக்களின் அளவு வயலுக்கு வயல் மாறுபடுவதாலும், தேவைப்படும் சத்துக்களின் அளவு பயிருக்கு பயிர் மாறுபடுவதாலும் மண் ஆய்வின் மூலமே பயிருக்கு ஏற்ற மிகச் சரியான உரப்பரிந்துரை வழங்க முடியும்.

மண்ணில் உள்ள தழை, மணி, சாம்பல் போன்ற பேரூட்டச் சத்துக்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களின் அளவை அறிந்திடவும், பயிருக்கு தேவையான உர அளவை அறிந்திடவும், மண்ணில் களர், உவர், அமிலம் மற்றும் சுண்ணாம்பு தன்மையை அறிந்து நிலச் சீர்திருத்தம் செய்திடவும், அங்ககச் சத்தின் அளவினை அறிந்து நிலத்தின் நிலையான வளத்தை காத்திடவும், மண்ணின் தன்மைக்கேற்ப பயிரை தேர்ந்தெடுத்து அதிக மகசூல் பெற்றிடவும் மண் பரிசோதனை மிக மிக அவசியம் ஆகும்.

அறுவடை செய்த பின்பும், அடுத்த பயிருக்கு நிலத்தை தயார் செய்வதற்கு முன்பும் உள்ள இடைப்பட்ட காலத்தில் மண் மாதிரிகள் எடுக்க வேண்டும், மண்ணின் நிறம், சரிவு மண் வகை (மணல், களி, செம்மண்) ஆகியவற்றை பொறுத்து மண் மாதிரிகளின் எண்ணிக்கையை கணக்கில் கொள்ள வேண்டும், வரப்பு ஓரங்கள், குப்பை குழிகளுக்கு அருகாமையில் பாசன வாய்க்காலுக்கு அருகாமை, மரத்தடி, உலர்களம், சாலை மற்றும் பள்ளங்களில் மண் மாதிரிகள் எடுக்கக் கூடாது.

மண் மாதிரியானது நெல், கேழ்வரகு, நிலக்கடலை, கம்பு மற்றும் சிறுதானிய பயிர்களுக்கு 6 அங்குலம், 15 செ,மீட்டர் என்ற அளவிலும், பருத்தி, கரும்பு, வாழை, மரவள்ளி மற்றும் காய்கறிகளுக்கு 9 அங்குலம், 22.5 செ.மீட்டர் என்ற அளவிலும் மாதிரிகள் எடுக்க வேண்டும்.  மா, தென்னை போன்ற மிக ஆழமாக வேர்கள் செல்லும் பழவகை மற்றும் மரப்பயிர்களுக்கு 12, 24, 36 அங்குல ஆழங்களில் மூன்று மாதிரிகளும் எடுக்க வேண்டும். மூன்று அடி ஆழமுள்ள குழி தோண்டி அதில் முதல் ஒரு மண் மாதிரியும், இரண்டாவது அடியில் ஒரு மண் மாதிரியும், மூன்றாவது அடியில் ஒரு மண் மாதிரியும் தனித்தனியாக எடுக்க வேண்டும்.

நீடித்த நிலையான வேளாண்மை இயக்க திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் 633 வருவாய் கிராமங்களிலும் மண் மாதிரிகள் (கிரிட்) வலைச்சட்ட முறையில் சேகரம் செய்ய திட்டமிடப்பட்டு அதன்படி 2017-18ம் ஆண்டு 293 வருவாய் கிராமங்களில் 21,600 மண் மாதிரிகள் எடுக்கப்பட்டு, 1,23,345 மண் வள அட்டைகள் வழங்கப்படவும்.   2018-19ம் ஆண்டு 340 வருவாய் கிராமங்களில் 22,831 மண் மாதிரிகள் சேகரம் செய்து 1,29,043 மண் வள அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டு மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.

நீடித்த நிலையான வேளாண்மை இயக்க திட்டத்தின் மூலம் கிராம வரைபடம் மூலம் இறவை நிலங்களில் 2.5 எக்டருக்கு ஒரு மண் மாதிரியும், மானாவாரி நிலங்களில் 10 எக்டருக்கு 1 மண் மாதிரியும் சேகரம் செய்யப்பட உள்ளது.  சேகரம் செய்யப்பட்ட மண் மாதிரியின் கார, அமில நிலை, உப்பின் நிலை, சுண்ணாம்பு நிலை, மண் நயம், பேரூட்ட சத்துக்களான தழை, மணி, சாம்பல் சத்துக்கள் மற்றும் இரண்டாம் நிலை சத்துக்களான கால்சியம், மக்னிசியம், கந்தகம் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களான இரும்பு, மாங்கனிசு, துத்தநாகம், தாமிரம், போரான், அங்கக கார்பன் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு ஆய்வு முடிவுகள் மண்ணின் தன்மை மற்றும் சாகுபடி பயிருக்கு ஏற்ப உரப் பரிந்துரை வழங்கப்படுகிறது.

மண்வள பரிசோதனை செய்ய விரும்புபவர்கள் அந்தந்த வட்டத்தில் உள்ள உதவி வேளாண் அலுவலர்களை அனுகி பயன்பெறலாம். இந்த மண்வள பரிசோதனை ஆய்வு முடிவுகள் மண்வள அட்டையில் பதிவு செய்து வழங்கப்படும். மேலும் கிரிட்டில் (வலைச்சட்டம்) உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மண்வள அட்டை வழங்கப்படும். மண்வள அட்டைக்கு  எவ்வித கட்டணமும் வசூலிப்பதில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைத்து விவசாயிகளுக்கும் மண்வள அட்டை வழங்கப்பட்டுள்ளது.   அதே கிரிட்டில் இரண்டு வருடங்களிலும் மண் மாதிரி சேகரம் செய்து மண் வளத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் கணக்கிடப்பட்டு, உரப்பரிந்துரை செய்து விவசாயிகளுக்கு உர செலவினை குறைத்து உற்பத்தியை பெருக்க மண்வள அட்டை விநியோகம் செய்யப்பட உள்ளது. இவ்வாறு கலெக்டர் வா.சம்பத்., தெரிவித்தார்.
   
இந்த செய்தியாளர் பயணத்தில், மேட்டூர் சார் கலெக்டர் மேகநாதரெட்டி,   ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்கநர் கே.கவிதா, இணை இயக்குநர் (வேளாண்மை) சௌந்தரராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.சுவாமிநாதன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) செ.கு.ப.சதீஸ்குமார், பத்திரிக்கையாளர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: