முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசைக்கு தேவை அளவுகோல்...!

செவ்வாய்க்கிழமை, 29 ஆகஸ்ட் 2017      மாணவர் பூமி
Image Unavailable

Source: provided

ஒரு விடயம் தேவை என்று எண்ணும் எண்ணமே ஆசைக்கு வித்தாகும். பொதுவாக தன்னிடம் இருக்கும் பொருட்களின் தன்மையும் தன்னிடம் உள்ள பணத்தின் அளவினையும் பொறுத்து தனது ஆசைகளை உருவாக்கிக் கொள்வர் அல்லது வளர்த்துக் கொள்வர். ஆசைகள் அளவில்லாதது இருப்பினும் தன்னிடம் உள்ள பொருளின் அளவிற்கு ஒரு வரைமுறை இருப்பதால் மக்கள் தாம் ஆசைப்பட்ட எல்லாவற்றையும் அடைய இயலாது.

எனினும் அவர்கள் வாழ்வில் நன்றாக வாழ பல வகையான மாற்றுப் பொருட்களை தகுதியான ஆசையால் அடைவதிலும் ஆசை கொண்ட பொருட்களை அத்தியாவசியமானவையாக இல்லாவிடினும் நன்றாக வாழ உதவும் பொருட்கள் என்பர். இவ்வாறான பிரிவினை பற்றிய அறிவினை வைத்து எவ்வாறு சந்தையில் பொருட்களை விற்பதென்று ஆளுமை ஆய்வாளர்கள் முடிவெடுத்து வெற்றியும் அடைவர்.

“சே! எனக்கு அப்போதே தெரியும், வேண்டாம்னு தான் தோனுச்சு… என் கெட்ட நேரம் பாருங்க, அதிலே போய் மாட்டிக்கிட்டேன்”.  இப்படி பலர், கஷ்டத்தில் சிக்கிக் கொண்டு, கலங்கிப் பேசுவதை நாம் அடிக்கடி பார்த்திருக்கிறோம்.

அறிவு எச்சரித்தும், ஆசை இழுத்த இழுப்பிற்குச் சென்றதால் தான் கஷ்டமே. ‘முணு சீட்டு’ போன்ற சாலையோர சூதாட்டக்காரர்கள் என்ன சொல்கிறார்கள். குறிப்பிட்ட சீட்டில் காசை வைத்து ஜெயித்தால் ஒரு ரூபாய்க்கு பத்து ரூபாய் பரிசு என்கிறார்கள். குதிரைப் பந்தயத்திலும் அப்படி, லாட்டரி சீட்டு விற்பனையிலும் அப்படி, மனிதர்கள் ஏன் இதில் போய் விழுந்து ஏமாறுகிறார்கள்.  ஒரு ரூபாய் செலவில், உழைப்பில்லாமல் பத்து, நூறு, ஆயிரம், லட்சம், கோடி ரூபாய் என்று கிடைக்கிறதே என்கிற நப்பாசை தான்.

பத்தாயிரம் பணம் முதலீடு செய்தால் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வட்டியும், ஆண்டு இறுதியில் முதலீடு செய்த பத்தாயிரம் ரொக்கமும் முழுமையாக வழங்கப்படும் என்று கூறி பல பேரிடம் பல கோடி ரூபாயை வசூலித்துக் கொண்டு தலைமறைவாகி விடும் சீட்டு கம்பெனிக்காரர்கள் பலர்.  பணத்தைக் கொண்டு ஏமாந்தவர்களில் பலபேர் மனம் உடைந்து மனநோயாளிகளாகவும், சிலர் தற்கொலை செய்து கொள்வதையும் பார்க்கிறோம்.

உழைப்பின் மூலம் நேரிய வழியில் வரக்கூடிய பணமே சரிவர வராமல் இழுத்தடிக்கப்படுகிற இந்த உலகில், உழைப்பில்லாமல் குறுக்கு வழியில் ஏராளமாக பணம் கிடைக்கும் என்று யாராவது ஆசை காட்டினால் அது நிச்சயம் சூது - சூழ்ச்சி – தானே தவிர, வேறல்ல.  உழைத்து, சேமித்து, எங்கும் ஏமாறாமல் வைத்திருக்கிற பத்தாயிரம் பணம் எப்போதும் அவனை விட்டுப் போவதில்லை. குறுக்கு வழியில் திடீர் பணக்காரனாக பத்து லட்ச ரூபாய் முதலீடு செய்கிறவன், கடைசியில் பத்து ரூபாய் கூட இல்லாத பரதேசி ஆகிவிடுகிறான்.

சில விஷயங்களில் நாம் தீவிர ஆசைப்பட்டு அது கிடைத்து விட்டாலும் ஆபத்து. காரணம், நாம் தீவிரமாக ஆசைபட்டு அது ஆசைப்பட்டதை அடைய நம் மனசு சதாகாலமும் அதற்கான சூழ்நிலையை உண்டாக்குகிறது. நாம் தீவிரமாக விரும்புவது நமக்கு நேர்மையான பலன் தருவதாக இருக்க வேண்டும்.

ஒரு சூதாட்ட கிளப் ஆரம்பிக்க வேண்டும் என்பதை எதிர்கால ஆசையாகக் கொண்டு, அதே எண்ணம், முயற்சி இவற்றில் ஒருவன் மனம் தீவிரமாக ஈடுபடுமானால், விரைவிலேயே அவன் ஒரு சூதாட்ட கிளப் ஆரம்பிக்க வாய்ப்பு கிடைக்கலாம்.
வாங்கிய பிறகு, சூதாட்ட கிளப்பில் தகராறு, ரவுடிகள் மாமூல் வசூல், போலீஸ் கெடுபிடி என்று பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகி, அடிதடி, போலீஸ் கேஸ் என்றெல்லாம் ஆகி, வழக்கு, சிறை என்றெல்லாம் செலவாகி, கடனாளி ஆனதோடு, மானம், மரியாதையும் போய்விடும். காரணம்? அவர் ஈடுபட விரும்பியது சமூகத்திற்குப் பயனுள்ள தொழில் அல்ல் மதிப்பு மரியாதைக்குரிய தொழில் அல்ல.

எனவே ஆசைப்படுவதை அடைவது எப்படி என்று அறிந்து கொள்ள ஆர்வம் கொள்ளும் போது, எதை அடைய ஆசைப்படுகிறீர்கள் என்பதையும் ஆராய்ந்து, நல்லதை, நாலு பேர் நேர்மையான வழியில், பயன்பெறுவதை, சமூகம் மதிப்பதை மட்டுமே நோக்கமாக கொள்ளுங்கள்.

இதற்கு வெள்ளை யானை பரிசுக் கதை ஒன்று சொல்வார்கள். அந்த நாளில் ராஜாக்கள் தனக்கு பிடிக்காத ஒருவரை மீள முடியாத சங்கடத்தில் ஆழ்த்திட வேண்டும் என்று நினைத்தால், விருந்துக்குக் கூப்பிட்டு, நல்ல சாப்பாடு போடுவார்களாம்.  கடைசியில் ஒரு வெள்ளை நிற யானையை பரிசாகக் கொடுத்து விடுவார்களாம். வெள்ளை நிற யானை அபூர்வமானது; கிடைப்பதற்கு அரிதானது. கறுப்பு நிற யானையை எங்கும் பார்க்கலாம். எனவே, அபூர்வமான வெள்ளை நிற யானையை வாங்கிக் கொண்டு போகிறவர்கள், மிகுந்த பெருமையோடு செல்வார்கள். 

அதைக் கொண்டு போய் கட்டி வைத்து பராமரிப்பு செய்ய எல்லா முயற்சிகளும் எடுத்துக் கொள்வார்கள். பணம் விரயமாகும். சொத்து கரைந்து போகும். இறுதியில் யானை மட்டுமே மிஞ்சும். கடைசியில் அவர் ஒன்றுமில்லாதவராக நடுத்தெருவுக்கு வந்து விடுவார். ராஜா விரும்பியதும் அதைத்தானே!  நாம் கொள்ளும் ஆசைகளும் பல சமயங்களில் வெள்ளை யானை வளர்த்த கதையாகவே இருக்கிறது. வாழ்க்கை நமக்காக பல வெள்ளையானைகளை வைத்துக் கொண்டு காத்திருக்கிறது. அவற்றைக் கொண்டு வந்து வளர்க்கும் ஆசையில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதில் தான் நம்முடைய விவேகம் புலப்படுகிறது.

இதை இன்னொரு கோணத்தில் சொல்வது என்றால் சிலவற்றை அடைய ஆசைப்படுவதை விட, சரியானவற்றைத் தீர்மானிக்கும் அறிவு நுட்பத்துக்காக நாம் ஆசைப்படலாம். அப்படி ஆசைப்படுவது நமக்குப் பாதுகாப்பானது.  பிறரது சங்கடங்களையும், இழப்புகளையும் பார்த்து நாம் திருந்துவதற்கு அது தேவையான அறிவைக் கொடுக்கும். நாமே அதுபோன்ற ஒரு நிலையில் அகப்பட்டுக் கொண்டு பிறருடைய அனுதாபத்துக்கு ஆளாகாமல் இருக்க அது பயன்படும்.

‘அறிவு அற்றம் காக்கும் கருவி’ என்பார் வள்ளுவர். அறிவு, ஆபத்திலிருந்து நம்மைக் காக்கும் கருவி என்கிறார். ஆம், அறிவு என்பது ஓர் விளக்கு. தவறு என்னும் ஆபத்தை அது நமக்கு அடையாளம் காட்டுகிறது. சரியான வழியில் செல்லும் முறையையும் நமக்கு அது சுட்டிக் காட்டுகிறது.  நாம் ஆசைப்படுவது எப்படி? நமக்கு நன்மையைத் தரத் தேவைப்படுவது எது? இந்த இரண்டையும் பாகுபாடு செய்து புரிந்து கொள்ளும் விவேகத்தைத் தருவது தான் அறிவு.  நாம் ஆசைப்படுவதை அடைய உடனே துடிப்போம். நமக்குத் தேவையானதைப் புரிந்து கொள்ள நிதானமும் அனுபவமும் தேவை. 

இந்த இரண்டுக்கும் உள்ள இடைவெளி, நமக்கு வாழ்க்கையில் வெற்றி கிடைக்கச் செய்யும் வழியாக அமைந்து விடுகிறது. ஒரு கணம் யோசித்து பாருங்கள். குழந்தை விரும்புவதை எல்லாம் அடைய பெற்றோர் இடம் கொடுத்தால் என்னவாகியிருக்கும்.  குழந்தை மண் தின்ன முயலும்; சாக்பீஸ் தின்ன முயலும், கீழே கிடக்கும் எதை வேண்டுமானாலும் எடுத்து வாயில் வைத்துக் கொள்ளும், நாணயத்தை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளும், பெற்றோர் அதைக் கண்டு பதறி, குழந்தையின் வாயில் விரலை விட்டு அதை வெளியே எடுக்கிறார்கள். இல்லையேல், அவை குழந்தையின் வயிற்றுக்குள் சென்றால் என்ன ஆபத்து நேரும் என்பது குழந்தைக்குத் தெரியாது, ஆனால் பெற்றோருக்குத் தெரியும்.


அதனால் தான் அவர்கள் குழந்தையின் தவறான ஆபத்தான – ஆசைக்கு குறுக்கே நிற்கிறார்கள். குழந்தை எரிகிற விளக்கை தொடப் போகிறது; வெந்நீர் பாத்திரத்தில் கை விடப்போகிறது. இதெல்லாம் குழந்தைக்கு விபத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் தான், அதைத் தடுக்கிறோம்.  நாம் குழந்தையாக இருந்த போது நம்முடைய போக்கின்படி நம் பெற்றோர் விட்டிருந்தால், விளைவுகள் விபரீதமாகத்தான் போயிருக்கும். இதற்கு சுவாமி சின்மயானந்தர் ஒரு அழகான கதை சொல்லுவார்.

பெரிய புற்றில் ஒரு பாம்பு இருந்தது. தினமும் அது வெளியே செல்லும். இரை தேடி உண்டுவிட்டு, புற்றுக்கு திரும்பும். அது ஒரு அறிவுள்ள பாம்பு. எங்கும் யாரிடமும் அகப்பட்டுக் கொள்ளாமல் தப்பித்துக் கொள்ளும்.  அது புத்திசாலியாக இருந்ததால் அதன் வாலுக்கும் ‘புத்தி’ ஏற்பட்டு விட்டது. அது தன் ‘வால்’ தனத்தைக் காண்பிக்க ஆரம்பித்தது. ஒரு நாள் அதற்கு ஒரு யோசனை தோன்றியது; ‘நாம் ஏன், நம் தலை காட்டுகிற பக்கமாகவே போய்க் கொண்டிருக்க வேண்டும்? நாம் காட்டுகிற பாதையில் ஏன் தலை தொடர்ந்து வரக்கூடாது?” என்று எண்ணிற்று.

அந்த ஆசையை செயல்படுத்தவும் துணிந்தது.  தான் நினைத்தபடி அது தன் உடம்பை வால் பக்கமாக இழுத்துச் செல்ல ஆரம்பித்தது. ஆனால் இந்த விஷயம் தலைக்குத் தெரியாது. வழக்கம் போல அது தலைப்பகம் இழுத்துக் கொண்டு போயிற்று. அதனால் வயிறு நடுப்பகுதியில் மாட்டிக்கொண்டது. இரண்டு பக்கங்களிலிருந்து இழுத்தபோது, அதற்கு சொல்ல முடியாத வேதனை ஏற்பட்டது.  வயிற்றின் வேதனை மூளைக்குத் தெரியும் அல்லவா? மூளைக்கு அந்த அறிவிப்பு கிடைத்ததும், தலை உணர்ந்து கொண்டது; ஆனால் வாலினால் உணர முடியவில்லை.  “ஏன் அழுகிறாய்?” என்று வயிற்றுப் பகுதியைக் கேட்டது தலை. “நீ ஒரு பக்கம் இழுக்கிறாய்.

வால் இன்னொரு பக்கம் இழுக்கிறது. நான் நடுவில் அகப்பட்டுக் கொண்டு திண்டாடுகிறேன். என்ன செய்வது? அதனால் அழுகிறேன்!” என்றது வயிறு. வாலினால் இதை புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் அது சிரித்தபடியே இருந்தது.  தலை, வாலை பார்த்துக் கேட்டது, “ஏன் இப்படிச் செய்கிறாய்? வயிறு படும் வேதனையைப் பார்த்தாயா? உனக்கு அதன் துன்பம் புரியவில்லையா?” என்று! வாலுக்குப் புரியத்தான் இல்லை.  ஆனால் தன்னுடைய செயலால் ஏதோ துன்பம் ஏற்படுகிறது என்பதை மட்டும் அது உணர்ந்து கொண்டது. ஆனால் அது விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை! 

“நீ ஒப்புக்கொண்டால் வயிறு துன்பப்படாமல் காப்பாற்றலாம்!” என்று வால் சொன்னது. தலைக்கு அது புரியவில்லை. ஆனால் துன்பம் தீருமானால் அந்த வழியை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தது. “என்ன செய்யவேண்டும், சொல்லு!” என்று வாலைப் பார்த்துக் கேட்டது.  “நானே வழி காட்டுகிறேன். நான் முன்னால் இழுத்துக் கொண்டு போகிறேன். நீ பின்னால் தொடர்ந்து வா, இவ்வளவு நாளும் நீ சென்ற வழியில் நான் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தேன். இன்று, நான் போகும் வழியில் நீ, பின் தொடர்ந்து வா, பார்க்கலாம்!” என்றது வால். 

இது விபரீதமான ஆசையாக தலைக்குத் தோன்றியது.“உன்னால் சிந்திக்க முடியாதே! என்னால் தானே சிந்திக்க முடியும்?” என்றது வால்.  “உன்னால் பார்க்க முடியாதே. என்னால் தானே பார்க்க முடியும்? கண்கள் என்னிடம் தானே இருக்கின்றன?” என்று மறுபடியும் கேட்டது தலை.  “அதைப்பற்றி எனக்கு அக்கறை இல்லை. இத்தனை நாளும் நான் நகர்ந்து, ஊர்ந்து பார்த்த வழிதானே? புதிதாகப் பார்க்க என்ன இருக்கிறது? உனக்கு இஷ்டமிருந்தால் வா, இல்லாவிட்டால் நான் என்னுடைய வழியில் போகிறேன்!” என்றது.  தலை, பாம்பின் வயிற்றைப் பார்த்தது. “ஐயோ! நான் படும் துன்பம் உனக்குத் தெரியவில்லையா? பேசாமல் வால் கூறும் யோசனைக்கு ஒப்புக்கொண்டு விடேன்!” என்று கெஞ்சியது. வயிறு. அது படும் கஷ்டத்தைப் பார்க்க தலைக்குப் பாவமாக இருந்தது.

சரியான விஷயங்களை பார்க்கவும், கவனித்து புரிந்து கொண்டு வழி காட்டவும் தன்னால் தான் முடியும் என்று அதற்குத் தெரியும். ஆனால் என்ன செய்வது? வால் ஒப்புக் கொள்ளவில்லையே! வால் போகிற வழியில் விட்டுவிட்டது!  “எங்கேயாவது போய் வால் அடிபடும், நசுங்கிப் போகும். அப்புறம் புத்தி வரும். நான் சொன்ன வழியே சரி என்று அதற்குப் புரியும். அது வரையில் இஷ்டப்படி திரியட்டும்!” என்று விட்டு விட்டு, வால் முன்னால் போக, அது வாலைத் தொடர்ந்தது. வால் மனம்போன படியெல்லாம் போயிற்று.  அதனால் வழியை சரிபார்த்துச் சொல்ல முடியவில்லை. தலை பின்புறம் இருந்தது அல்லவா? எனவே வரப்போவதை அதனால் பார்க்க இயலவில்லை. ஆனால் தலை, வழிநெடுகத் தான் தவறவிட்டு விட்ட, நல்ல விஷயங்களை பார்த்துக் கொண்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!