முக்கிய செய்திகள்

132 ஆண்டு பாரம்பரிய காங்கிரஸ் கட்சிக்கு தலைவராகும் ராகுல் காந்தி அடுத்தமாதம் பொறுப்பேற்கிறார்

Rahul Gandhi 2017 06 03

சென்னை,  132 ஆண்டு பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி அடுத்த மாதம் பொறுப்பேற்க உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொள்வதற்கான அனைத்து கதவுகளும் திறக்கப்பட்டு விட்டன. கட்சித் தலைவர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது, இதில் போட்டியின்றி ஒரு மனதாக ராகுல் தேர்ந்தெடுக்கப்படவே வாய்ப்புகள் உள்ளன. 1885ல் தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சி இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சி. காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் சுதந்திரத்துக்கு முந்தைய காங்கிரஸில் திரும்பிய திசையெங்கும் பெருந்தலைவர்களாக வலம் வந்தனர். நாடு விடுதலை அடைந்த பின்னர் நேரு மறைவைத் தொடர்ந்து காமராஜர் காங்கிரஸ் தலைவராக இருந்தார். காமராஜர் தாம் பிரதமர் நாற்காலியில் அமராமல் லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமராக்கினார். தமிழகத்தில் காமராஜர் தோல்வியை சந்திக்க தொடங்கிய காலத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை இந்திராவின் பிடிக்குள் போனது. காங்கிரஸ் பிளவுகளை சந்தித்த போதும் இந்திராவின் காங்கிரஸாகவே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இருந்தது.

இந்திரா படுகொலைக்குப் பின்னர் பிரணாப் முகர்ஜி போன்றவர்கள் தலைதூக்க பார்த்தனர். ஆனால் இந்திராவின் மகன் ராஜீவ் காந்தி வசமே காங்கிரஸ் போனது. ராஜீவ் படுகொலைக்குப் பின்னர் சோனியா காந்தி உடனே தலைமை ஏற்கவில்லை. ஆனாலும் மெல்ல மெல்ல மீண்டும் இந்திரா குடும்பத்தின் கைகளுக்கே காங்கிரஸ் சென்றது. கடந்த 19 ஆண்டுகாலமாக சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக இருந்து வருகிறார். தலைவராகிறார் ராகுல்காந்தி

இந்நிலையில் தான் நேரு குடும்பத்து மற்றொரு வாரிசான ராகுல்காந்தி மிகப்பெரும் தலைவர்கள் வகித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை அடுத்த மாதத்தில் ஏற்க உள்ளார். அண்மையில் ராகுல்காந்தி அமெரிக்காவிற்கு மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து 2019 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கத் தயாராக உள்ளதாக கூறினார்.

ஆனால் நிஜத்தில் ராகுல் காந்திக்கு அது ஒரு சவாலான விஷயமே ஏனெனில் 18 மாதங்களுக்குள்ளாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஏற்ப கட்சியின் கட்டமைப்பை அவர் மாற்றியமைக்க வேண்டும். 2014ம் ஆண்டு முதலே காங்கிரஸ் கட்சி சரிவான பாதையில் தான் இருக்கிறது. எனினும் காங்கிரஸ் கட்சி மீதான நம்பகத்தன்மையை கொண்டு வர ராகுலுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி வாய்ப்பு அளித்திருக்கிறது. ஏனெனில் வளர்ச்சி மந்தநிலை, பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை மற்றும் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு விவகாரம் உள்ளிட்டவற்றால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டால் கட்சி வாக்கு விகிதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மற்றொரு புறம் சோனியாகாந்தி 19 ஆண்டுகள் கட்சியை வழிநடத்திய போது சுமார் 10 ஆண்டுகள் அந்தக் கட்சி ஆட்சியில் இருந்துள்ளது. எனவே தலைவராக பொறுப்பேற்கும் ராகுல்காந்திக்கு அந்த நெருக்கடியும் உள்ளது. கடந்த 2004ம் ஆண்டு முதல் ராகுல்காந்தி அரசியலில் இருக்கிறார். 2013 முதல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி தன்னை எப்படி பிரதமர் நரேந்திர மோடிக்கான மாற்று சக்தி என்பதை மக்களுக்கு நிரூபிப்பார் என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. தலைவராகும் ராகுலுக்கு உடனடியாக இருக்கும் அடுத்தடுத்த 2 தேர்தல்கள் என்றால் அது இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் மற்றும் குஜராத் சட்டசபை தேர்தல். இது மட்டுமின்றி அடுத்த ஆண்டில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், கர்நாடகா உள்ளிட்ட 8 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த மாநிலங்களில் எல்லாம் பல ஆண்டுகளாகவே காங்கிரஸ், பாஜகவிற்கு நேரடி போட்டி உள்ளது. இதைத் தொடர்ந்து தான் 2019ல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

இதே போன்று ராகுல்காந்தி ஏற்கனவே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுடன் எந்த மாதிரியான அணுகுமுறையை கையாளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஏனெனில் ராகுலின் நடவடிக்கையால் ஏற்கனவே சில மாநிலத்தில் கூட்டணி கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சரத்பவார், திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த மம்தா பானர்ஜி, லல்லு பிரசாத் யாதவ் உள்ளிட்டோரெல்லாம் ராகுலைவிட வயதிலும் அரசியல் அனுபவத்திலும் மூத்தவர்கள். சோனியா தலைமையின் கீழ் செயல்பட இவர்கள் தயங்கியதில்லை ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை இவர்கள் ஏற்பார்களா என்ற கேள்வியும் உள்ளது. இதற்கான பதில்கள் எல்லாமே ராகுல் தலைமையில் சந்திக்கப் போகும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளே இறுதி செய்யும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து