முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது: ஓ.பி.எஸ். பரபரப்பு பேட்டி

வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2018      அரசியல்
Image Unavailable

சென்னை, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஓழுங்கு சிறப்பாக இருக்கிறது என்றும், தமிழகம் தீவிரவாதிகளின் பயிற்சிகளமாக இருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா பேரவையின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் அ.தி.மு.க. தலைமைக்கழக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், அமைச்சர் உதயகுமார், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பின்னர் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கே: தமிழகம் தீவிரவாதிகளின் பயிற்சி மையமாகதிகழ்ந்து வருவதாக  பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
ப: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. இந்தியாவில் உள்ள மற்றமாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது இதை நாம் அறிந்து கொள்ள முடியும். பொன்.ராதா கிருஷ்ணன் கூறியுள்ள கருத்து ஜமக்காளத்தில்  வடிகட்டிய பொய்.

கே: அ.தி.மு.க.வில் நீக்கப்பட்டு வருபவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகள் எப்போது நியமிக்கப்படுவார்கள்.
ப: ஜெயலலிதா பிறந்தநாளுக்கு முன்பாகவே புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவார்கள்.

கே: சரியான வருவாய் இல்லாத காரணத்தால் அம்மா உணவகங்கள் சரியாக செயல்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளதே.
ப: வருவாய் நோக்கத்திற்காக அம்மா உணவகம் தொடங்கப்படவில்லை. ஏழை எளிய நலிவடைந்த மக்களுக்கு தரமான உணவு, குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்றநோக்கத்தில் தான் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. அது தொடர்ந்து நல்லமுறையில் செயல்படுத்தப்படும்.

கே: அனிதா குப்புசாமி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி அ.தி.மு.க.விலிருந்து விலகுவதாக கூறியுள்ளார்?
ப: அவரவர் மனதில் தோன்றுவதை அவரர் பேசி வருவார்கள். பொது மக்கள் எண்ணம் அதுவல்ல.

கே:சட்டப்பேரவையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்தை திறக்க பிரதமர் வருகைதராததற்கான காரணம் என்ன?
ப: பிரதமருக்கு நேரமின்மை காரணமாக இந்த விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை.

கே: போக்குவரத்து துறையை சீரமைக்க எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின்  ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளாரே அதை செயல்படுத்துவீர்களா?
ப: 2006 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தின் போது அப்போதைய முதல்வர், போக்குவரத்து துறை அமைச்சரிடம் கூறி அப்போதே இதனை செயல்படுத்தி இருந்தால் போக்குவரத்து துறையில் நஷ்டங்களை தவிர்த்திருக்க முடியும். ஆனால் தற்போதுதான் ஸ்டாலினுக்கு ஞானோதயம் வந்துள்ளது.13-வது, 14-வது நிதிகுழுவில் தமிழத்திற்கு தருவதாக கூறிய தொகையே இன்னும் நிலுவையில் உள்ளது. வளர்ச்சியடைந்த மாநிலம் என்ற ஒரே காரணத்திற்காக தமிழகம் புறக்கணிப்படுவது முறையல்ல. 15-வது நிதிக்குழுவில் தமிழகத்திற்கு உரிய நிதியினை வழங்கி மற்றும் பழைய நிலுவைத்தொகைகளையும் வழங்கவேண்டும் என்றும். தமிழகத்தில் நடைபெறும், முன்னோடித் திட்டத்திற்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

இதைத்தொடந்து தினகரன் குறித்தகேள்வியொன்றை நிருபர்கள் எழுப்பினர். அதற்கு பதிலளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தினகரன் உள்பட எதிர்கட்சிகள் யாராக இருந்தாலும் அ.தி.மு.கவிற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. அழகான, உறுதியான அஸ்திவாரத்தை ஜெயலலிதா எங்களுக்கு ஏற்படுத்தியுள்ளார் என்று பன்னீர்செல்வம் பதிலளித்தார். இதனை தொடந்து நிருபர்கள், முதல்வர் பதவியிலிருந்து விலகி ஒரு வருடம் ஆனதில் வருத்தம் உள்ளதா என்ற கேள்விக்கு “எதைக் கொண்டுவந்தோம் இழப்பதற்கு‘ என பன்னீர் செல்வம் பளிச் என்று பதில் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து