அ.தி.மு.க. வேட்பாளர்கள் ரவீந்திரநாத் குமார், லோகிராஜன் ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம்

திங்கட்கிழமை, 1 ஏப்ரல் 2019      அரசியல்
Andipati Election Ravindranath Kumar 2019 04 01

தேனி, தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் லோகிராஜன் ஆகியோர் ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட எட்டப்பராஜபுரம், வேலாயுதபுரம், கணேசபுரம், கண்டமனூர், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, சிறப்பாறை, சோலைத்தேவன்பட்டி, பின்னத்தேவன்பட்டி, உப்புத்துறை, கோவில்பாறை, தங்கம்மாள்புரம், பொன் நகர் உள்ளிட்ட கடமலை - மயிலை ஒன்றிய பகுதியில் தேனி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமார், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் லோகிராஜன் ஆகியோர் பொதுமக்களிடையே பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்தனர். 

பிரச்சாரத்தின் போது தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தேனி எம்.பி. ஆர்.பார்த்திபன், மாவட்ட துணை செயலாளர் முருக்கோடை ராமர், கடமலை - மயிலை ஒன்றிய செயலாளர் கொத்தாள முத்து, மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இப்பிரச்சாரத்தின் போது ரவீந்திரநாத் குமார் பேசியதாவது,

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் எங்களுக்கு ஆதரவளிக்க நீங்கள் திரளாக வந்திருக்கிறீர்கள். நான் தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராகவும், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக லோகிராஜனும் போட்டியிடுகிறோம். உங்கள் வீட்டு பிள்ளைகளான எங்களுக்கு, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் எங்களை வெற்றி பெற செய்ய வேண்டும். உங்கள் பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றி தருவோம்.

நம்மை எதிர்த்து போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் ஒருவர் முல்லை பெரியார் அணை பிரச்னையில் கேரள அரசோடு சேர்ந்து நமக்கு துரோகம் செய்த தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்தவர். மற்றொருவர் உங்களுக்காக உழைப்பேன் என்று கூறி விட்டு உங்களுக்காக பணியாற்றாமல் தனது சுயநலத்துக்காக சென்றவர். அவர் இல்லாவிட்டாலும் அம்மா அரசு கணேசபுரம், கண்டமனூர் உள்ளிட்ட உங்கள் பகுதியில் ஐந்தரை கோடி செலவில் முல்லை பெரியாரிலிருந்து தண்ணீர் கொண்டு வந்தது. தங்க தமிழ் செல்வன் பதவியில் இல்லாத இந்த 2 ஆண்டுகளில் அம்மா அரசு 2000 கோடி அளவிற்கு திட்டப் பணிகளை செய்துள்ளது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 கொடுத்தது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு நல்ல பல திட்டங்களை கொண்டு வருவோம். சிறப்பான ஆட்சியை கொடுத்துக் கொண்டிருக்கின்ற அம்மா ஆட்சியை வலுப் பெற செய்யவும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் வலிமையான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையவும், தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளரான எனக்கும், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் லோகிராஜனுக்கும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக சாலையின் இருபுறமும் பெண்கள் வழி நெடுகிலும் நின்று ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து