முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கு அடிப்படை வசதிகளுடன் 200 புதிய கடைகள் புதிய ஆம்னி பஸ் நிலையம் அமைக்கவும் முடிவு

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2019      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - திண்டுக்கல் காந்தி மார்க்கெட் மற்றும் ஆம்னி பஸ் பிரச்சனைக்கு மாநகராட்சி சார்பில் நிரந்தர தீர்வு ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நகராட்சியாக இருந்த திண்டுக்கல்லை மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 2012ம் ஆண்டு மாநகராட்சியாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து மாநகராட்சிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ள நிதியுதவியும் வழங்கினார். சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்களுக்கு தேவையான மேலும் பல்வேறு பணிகளை மேற்கொள்ள அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு நடத்தி அதற்கான தீர்வுகள் காணும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் காந்தி மார்க்கெட் பிரச்சனைக்குக்கும், அங்குள்ள வியாபாரிகள் நலனுக்காகவும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 1934ம் ஆண்டு மகாத்மா காந்தி பேசிய இடம் இன்றளவும் திண்டுக்கல்லில் காந்தி நாடக மேடையாக விளங்குகிறது. இதன் அருகிலேயே காந்தி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகளால் கொண்டு வரப்படும் காய்கறிகள், கமிஷன் அடிப்படையில் வியாபாரிகளால் வாங்கப்பட்டு பின்னர் கடை வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். மேலும் மார்க்கெட் வெளியே சில்லறை விலையில் வியாபாரிகள் கடை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். இருப்பினும் மழை காலங்களில் காந்தி மார்க்கெட் மக்கள் நடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனை போக்கும் வகையிலும் காந்தி மார்க்கெட்டை தரம் உயர்த்தி தரைத்தளத்துடன் கடை அமைக்கவும், பொதுமக்கள் சில்லறையிலும் இங்கு காய்கறிகள் வாங்கிச் செல்லும் வகையில் 200 புதிய கடைகள் அமைத்துத் தரவும் மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுப்பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மார்க்கெட்டில் உள்ள தற்போதுள்ள கடைகளின் எண்ணிக்கை, வெளிப்பகுதியில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தியதுடன் தரம் உயர்த்தப்படும் மார்க்கெட்டில் குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்து தருவதற்கும் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து பிரேரணை தயார் செய்யப்பட்டு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசனிடம் அதிகாரிகள் வழங்கியபிறகு விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்மூலம் திண்டுக்கல் காந்தி மார்க்கெட் வியாபாரிகளின் நீண்ட கால பிரச்சனைக்கும், பொதுமக்களின் கோரிக்கைக்கும் தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இதேபோல் திண்டுக்கல் _ பழனி சாலையில் பல ஆண்டுகளாக லாரி பேட்டை செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தின் ஒரு பகுதியை ஆம்னி பஸ் நிறுத்தமாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் நகரில் இருந்து சென்னை, பெங்களூர், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு ஏராளமான ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் அனைத்தும் திண்டுக்கல் பஸ் நிலையத்தின் வெளிப்பகுதியிலேயே நிறுத்தப்பட்டு பயணிகள் ஏற்றிச் செல்லப்படுகின்றனர். திண்டுக்கல் பஸ் நிலையம் ஏற்கனவே இட நெருக்கடி காரணமாக மிகவும் தவித்து வருகின்றது. இதனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பஸ் நிலைய விரிவாக்கப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் நிறைவு பெற்ற பிறகு அனைத்து பஸ்களும் வந்து செல்லும் வகையிலும், புதிய வணிக வளாகங்களுடன் தரம் உயர்த்தப்பட்ட பேருந்து நிலையமாக மாறும் என்பதில் ஐயமில்லை. இருந்த போதும் ஆம்னி பஸ்களில் செல்வோர் பஸ் நிலையத்தில் காத்துக் கிடக்கும் நிலை இருப்பதால் பல சமயங்களில் கடுமையான நெருக்கடி ஏற்படுகிறது. எனவே லாரி பேட்டையை ஆம்னி பஸ் நிலையமாக மாற்றவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்மூலம் வெளியூர் செல்வதற்காக ஆம்னி பஸ்களில் புக்கிங் செய்யும் பயணிகள் பஸ் நிலையத்திற்கு வராமல் நகரின் மற்றொரு பகுதியான பழனி சாலையில் இருந்து தங்கள் பயணத்தைத் தொடர முடியும். இந்த முயற்சியும் விரைவில் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் திண்டுக்கல் நகர மக்களின் மற்றும் நீண்ட கால கோரிக்கை நிறைவேறும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து