யு19 உலகக்கோப்பை யாருக்கு? இறுதிப்போட்டியில் இந்தியா, வங்கதேசம் இன்று மோதல்

சனிக்கிழமை, 8 பெப்ரவரி 2020      விளையாட்டு
U19 world cup 2020 02 08

டர்பன் : 2020-ம் ஆண்டு யு19 உலக்கோப்பை யாருக்கு சொந்தம் என தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா - வங்கதேச அணிகள் இன்று பலப்பரீட்சை செய்கின்றன.

ஐ.சி.சி. சார்பில் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான உலக கோப்பை கிரிக்கெட்  தொடர் கடந்த மாதம் 17-ம் தேதி முதல் தென் ஆப்ரிக்காவில் நடந்து வருகிறது. இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 16 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதின. ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி நியூசிலாந்து,  இலங்கை, ஜப்பான் அணிகளை வீழ்த்தி 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. சூப்பர் லீக் கால் இறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்தியா 74 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று அரை இறுதிக்கு முன்னேறியது.

பரபரப்பான அரை இறுதியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில், 10 விக்கெட் வித்தாயசத்தில் அபாரமாக வென்ற இந்திய அணி தொடர்ந்து 3-வது முறையாக பைனலுக்கு முன்னேறியது. 2-வது அரையிறுதி போட்டியில்  நியூசிலாந்து-வங்கதேசம் அணிகள் மோதின. இதில், வங்கதேசம் அணி வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது. உலகக்கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இன்று போர்ச் செப்ஸ்ட் ரூமில் நடக்கிறது. இதில்,  இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. 4 முறை உலகக்கோப்பை வென்றுள்ள இந்திய அணி நடப்பு சாம்பியன் என்ற பட்டத்துடன் இறுதிப்போட்டியை எதிர்கொள்கிறது. இந்த முறையும் வெற்றி பெற்று தொடர்ச்சியாக 2-வது முறையாக  வென்று சாதனை படைக்கும் முனைப்பில் இந்திய வீரர்கள் உள்ளனர். இந்நிலையில், யு19 இந்திய கிரிக்கெட் அணிக்கு சீனியர் வீரர்கள் (யு19 உலகக்கோப்பையை வென்ற அணியில் இருந்தவர்கள்) வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை இந்திய கிரிக்கெட் வாரியம் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.

புஜாரா: இதுவரைக்கும் தொடரில் எவ்வாறு ஆடினீர்களோ, அதையே பின்பற்றுங்கள். இறுதி போட்டி என்பதால் கூடுதல் அழுத்தம் தேவையில்லை. உங்களுடைய இயல்பான ஆட்டத்தை வெளிபடுத்துங்கள். நிச்சயமாக நீங்கள் உலகக்கோப்பையை  வென்று வருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

விஜய் சங்கர்: இது ஒரு பெரிய சந்தர்ப்பம். முயற்சி செய்து மகிழுங்கள். வாழ்த்துக்கள்.

சாகா: நீங்கள் எப்போதும் இருந்த வழியில் ஆதிக்கம் செலுத்துங்கள். எதிர் அணி யார் என்பது முக்கியமல்ல. அவரை துவம்சம் செய்யுங்கள்.

ரகானே: இதுவரைக்கும் எப்படி விளையாடினீர்களோ, அப்படியே விளையாடுங்கள். நாங்கள் எல்லாம் உங்களை ஆதரிக்கிறோம். நாடே உங்களுக்கு பின்னால் இருக்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

இந்தியா யு19 கிரிக்கெட் அணி இதுவரை 4 முறை உலகக்கோப்பை வென்றுள்ளது. அதன் விவரம் வருமாறு:- 2000-ம் ஆண்டு (கேப்டன்: முகமது கைப்), 2008-ம் ஆண்டு (கேப்டன்: விராத் கோஹ்லி), 2012-ம் ஆண்டு (கேப்டன்: உன்முக்த் சந்த்) மற்றும் 2018-ல் (கேப்டன்: பிரித்வி ஷா) இளைஞர் உலக கோப்பையை வென்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து