முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் கொரோனா நோய்க்கு சிகிச்சை: திட்ட பயனாளிகளுக்கு கட்டணம் இல்லை என தமிழக அரசு அறிவிப்பு

வியாழக்கிழமை, 4 ஜூன் 2020      தமிழகம்
Image Unavailable

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதற்கான கட்டண விவரங்கள் குறித்தும் தமிழக அரசு விளக்கியுள்ளது.  இது தொடர்பாக தமிழக அரசு நேற்று  (ஜூன் 4) வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:-

தமிழக அரசு, முதல்வரின் சீரிய தலைமையில், கொரோனா தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சை குறித்து பன்முக நடவடிக்கைகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்றுக்கு இதுவரை பொதுவாக அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கு முதல்வர் ஆணையிட்டுள்ளார். முதல்வரின் ஆணைக்கிணங்க, கொரோனா சிகிச்சைக்கு தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு வழங்க வேண்டிய தொகுப்புக் கட்டணங்கள் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனியார் மருத்துவமனைக்கு தமிழக அரசால் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படவேண்டிய கட்டணத்தை நிர்ணயித்தும் ஒருசில நிபந்தனைகளுடன் கூடிய தனது அறிக்கையை அளித்தது. அதனை நன்கு பரிசிலித்த தமிழக அரசு, கீழ்கண்ட கட்டணங்களை நிர்ணயித்து ஒப்புதல் அளித்தது.

தனியார் மருத்துவமனைகளில் அறிகுறி இல்லாதவர்கள், லேசான அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5000 கட்டணம் வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.9,000 முதல் ரூ.15000 வரை கட்டணம் வசூலிக்கலாம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் உள்ள மொத்த படுக்கை எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 25 விழுக்காட்டை முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சைக்கு வரும் கொரோனா நோயாளிகளுக்குப் பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பயனாளிகள் மருத்துவமனைகளுக்கு எந்த ஒரு கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலாக தொகை செலுத்தக் கோரும் மருத்துவமனைகளின் மீது முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.  மேலும் விவரங்கள் மற்றும் புகாருக்கு - 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள உலகளாவிய மருத்துவப் பேரிடர் காலத்தில் அரசு மருத்துவமனைகளும் தனியார் மருத்துவமனைகளும் இணைந்து செயல்படும். இந்தப் புதிய அறிவிப்பு, தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே பதிவு செய்து பயன்பெறத் தகுதியான குடும்பங்களுக்குப் பொருந்தும். தமிழ்நாடு முதல்வரால் எடுக்கப்பட்டு வரும் இந்த நடவடிக்கைகளால், கொரோனா சிகிச்சை முறைகளை மேலும் வலுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து