முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செப்டம்பருக்குள் நடத்த இயலாத சூழ்நிலை உள்ளது: செமஸ்டர் தேர்வுகள் குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்க அதிகாரம் : மத்திய அமைச்சர் பொக்ரியாலுக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

சனிக்கிழமை, 11 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்த இயலாத சூழல் உள்ளது. இந்நிலையில் செமஸ்டர் தேர்வுகள் குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்க அதிகாரம் அளிக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருகிறது. தொற்றை கட்டுப்படுத்தவும், இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவை நல்ல பலன்களை கொடுத்தாலும், இன்னும் மாநிலத்திற்கு சவால்கள் இருக்கின்றன.

மாநில அரசின் முற்போக்கான கொள்கைகள் காரணமாக, இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பல்வேறு பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் அதிகபட்சமாக சேர்க்கை விகிதம் 49 சதவீதமாக உள்ளது. கல்லூரி பருவத் தேர்வுகளை (செமஸ்டர்) ஏப்ரல் மாதமே நடத்த திட்டமிட்டிருந்தாலும் அதனை கொரோனா தொற்றின் தாக்கத்தால் நடத்த முடியவில்லை.

பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தங்கள் வசதிக்கேற்ப தேர்வுகளை நடத்திக் கொள்ள பல்கலைக் கழக மானியக்குழு (யு.ஜி.சி.), கடந்த 29.04.2020 அன்று விதிமுறைகளை அறிவித்தது. கடந்த 6-ம் தேதி யு.ஜி.சி. அறிவித்த புதிய விதிமுறைகளின்படி அனைத்து கல்வி நிறுவனங்களும் இறுதியாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்குள் தேர்வுகளை நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.  

பல மாணவர்கள் வேறு மாவட்டங்களிலும் மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இருப்பதால், அவர்களால் தேர்வு மையங்களுக்கு வர முடியாத சூழல் நிலவுவதால் இந்த புதிய அறிவிப்பு பல சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் பலரால் இணைய வசதியை (ஆன்லைன்) அணுக முடியாத சூழல் நிலவுவதால் இணையவழி தேர்வுகளையும் நடத்த முடியாத நிலை உள்ளது. 

இதுதவிர, பெரும்பாலான அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்கள் (விடுதிகள், வகுப்பறைகள் உள்பட) அறிகுறியற்ற கொரோனா தொற்றாளர்களை தனிமைப்படுத்தி வைக்க கோவிட் கேர் சென்டராக மாற்றப்பட்டுள்ளன. அவ்வாறாகவே இன்னும் சில காலத்திற்கு அவை இருக்கும். 

செப்டம்பர் மாதத்திற்குள் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் உள்ளது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். மேலும், கேம்பஸ் நேர்காணல் மூலம் வேலைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், வெளிநாடுகளில் படிக்க விண்ணப்பித்த மாணவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். 

இந்தியாவின் பல மாநிலங்கள் இறுதி பருவ தேர்வுகளை நடத்துவதில்லை என முடிவெடுத்துள்ளது. தொழில் வாய்ப்புகள், எதிர்கால வாய்ப்புகளை உறுதி செய்வதற்கும், மாணவர்களுக்கு சுகாதாரம், பாதுகாப்பு, நியாயமான மற்றும் சமமான வாய்ப்புகளை பாதுகாப்பதற்கும், தரம் மற்றும் கல்வி நம்பகத்தன்மையில் சமரசம் செய்யாமல், மாநிலங்களுக்கு அதன் சொந்த மதிப்பீட்டு முறைகளை உருவாக்க சுதந்திரம் வழங்கலாம். 

மேற்கூறியவற்றின்படி, யு.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ., சி.ஓ.ஏ., பி.சி.ஐ., என்.சி.டி.இ., தேசிய ஓட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் தொழில்நுட்பத்திற்கான கவுன்சில் (என்.சி.ஹெச்.எம்.சி.டி.) ஆகியவை அந்தந்த மாநில அரசுகளின் முடிவுகளை அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும். இந்த துன்பகரமான காலங்களில் பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் நீதியையும் நியாயத்தையும் வழங்குவதில் இது உதவிகரமாக இருக்கும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து