முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதிபதிகளின் கருத்துகளை செய்தியாக்க ஊடகங்களுக்கு தடை விதிக்க முடியாது: தேர்தல் ஆணைய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

வியாழக்கிழமை, 6 மே 2021      இந்தியா
Image Unavailable

வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் கூறும் கருத்துகளை செய்தியாக்குவதற்கு ஊடகங்களுக்கு தடை விதிக்க முடியாது எனத் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், தேர்தல் ஆணையத்தின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.

கொரோனா காலத்தில் உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் தேர்தலை நடத்தியதற்காக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக்குற்றம் கூட சுமத்தலாம் என சென்னை ஐகோர்ட் குறிப்பிட்டதற்கு எதிராகவும், வழக்கு விசாரணையின் போது நீதுபதிகள் தெரிவிக்கும் கருத்துகளைச் செய்தியாக்க ஊடகங்களுக்குத் தடை விதிக்கக் கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் இந்திய தேர்தல் ஆணையம், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இதன் மீது நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், கருத்துரிமை என்பது நீதிமன்றங்களில் நடைபெறும் விசாரணைகள் குறித்து செய்தி சேகரிப்பதையும் உள்ளடக்கியதே. எனவே நீதிமன்ற விசாரணை நடைமுறைகளைச் செய்தியாக்க கூடாது என்று ஊடகங்களுக்குக் கூற முடியாது.

புதிய தொழில்நுட்பம் மூலம் விரைவாக உடனுக்குடன் செய்திகளை வெளியிடுவது, பிரசுரிப்பது என்பது ஊடகப் பேச்சு மற்றும் கருத்துரிமையின் ஒரு பகுதியே ஆகும். எனவே செய்தி சேகரிப்பது, வெளியிடுவது தொடர்பாக அரசியல் சாசன அமைப்புகள் குறை கூறுவதை விடுத்து தங்களது செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக்குற்றம் கூட சுமத்தலாம் எனச் சென்னை ஐகோர்ட் கூறியது கடுமையானதுதான். ஆனால், கொரோனா பரவத் தேர்தல் ஆணையம்தான் காரணம் என்று ஆணையத்தைத் தீர்க்கமாகக் குற்றவாளி எனக் கூறவில்லை.  ஒரு வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் கருத்துகளைக் கூறுவது என்பது சம்பந்தப்பட்ட விவகாரங்களில் ஒரு தீர்வை எட்டுவதற்கே. அதே வேளையில் கருத்துகள் அனைத்தும் தீர்ப்பு எழுதும் போது அதில் பிரதிபலிப்பதில்லை என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் நீதிபதிகள் கருத்து தெரிவிக்கும் போது கவனமாக வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தால் வழக்கில் எழுந்த இந்தப் பிரச்சினையை தவிர்த்திருக்காலம்.

இந்த விவகாரத்தில், ஐகோர்ட் தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றம் சுமத்தலாம் என்ற கருத்தைத் தீர்ப்பில் குறிப்பிடவில்லை. எனவே, மேல்முறையீட்டு மனுவில் எந்தவித முகாந்திரமும் காண முடியவில்லை. மேலும், நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்படும் கருத்துகளை ஊடகங்கள் செய்தியாக்குவதற்கு தடை விதிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் கோரியதில் எவ்வித சாரம்சமும் இல்லை. எனவே ஊடகங்கள் நீதிமன்ற வழக்கு விசாரணை நடைமுறைகள், நீதிபதிகளின் கருத்துகளைச் செய்தியாக்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையக் கோரிக்கையிலும் எந்த முகாந்திரத்தையும் காண முடியவில்லை. எனவே நீதிமன்ற நடவடிக்கை , நீதிபதி கருத்துகளை ஊடகங்கள் செய்தியாக்குவதற்கு தடை விதிக்க முடியாது எனக் கூறி, இந்திய தேர்தல் ஆணையத்தின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து