முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டியில் மலர் கண்காட்சி இன்று கோலாகல தொடக்கம்: சுற்றுலாபயணிகளை கவரும் வகையில் ஏற்பாடுகள் தீவிரம்

வியாழக்கிழமை, 9 மே 2024      தமிழகம்
Ooty 2024-05-04

ஊட்டி, ஊட்டியில் இன்று மலர் கண்காட்சி கோலாகலமாக தொடங்குகிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மலைவாச சுற்றுலா தலங்களில் ஊட்டி முக்கியமான ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். 

இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஆண்டுதோறும் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கோடைவிழா ஊட்டி தாவரவியல் பூங்காவில் இன்று  126-வது மலர் கண்காட்சியுடன் தொடங்குகிறது. 

இன்று தொடங்கும் மலர் கண்காட்சியானது வருகிற 20-ம் தேதி வரை நடக்க உள்ளது. மலர் கண்காட்சியை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் பல்வேறு வகைகளை கொண்ட 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. 

இன்கா மேரி கோல்டு, பிரஞ்ச் மேரி கோல்டு, பிளாக்ஸ், பெட்டூனியா, பேன்சி, டயான்தஸ், பிகோ னியா, டேலியா, பால்சம், ரெனன்குலஸ் வயோலா, அஜிரேட்டம், கேலண்டுலா, கிளாடியோலஸ், வில்லியம், சூரியகாந்தி, சப்னேரியா போன்றை பூங்காவலில் உள்ள பல்வேறு பகுதிகளில் மலர் பாத்திகளில் நடவு செய்யப்பட்டு பொலிவுடன் காட்சி அளித்து கொண்டிருக்கிறது.

தயார் செய்யப்பட்ட 388 ரகங்களை சேர்ந்த 65 ஆயிரம் மலர் தொட்டிகள் மலர் மாடத்தில் பார்வையாளர்களை கவரும் வகையில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த முறை பல வண்ணங்களை கொண்ட ஒரு லட்சம் ரோஜா மலர்களை கொண்டு பிரமாண்ட டிஸ்னி வேர்ல்டு, காளான், ஆக்டோபஸ் மற்றும் மலர் கோபுரங்கள் உள்பட 10 வகையான மலர் அலங்காரங்கள் பல லட்சம் ரோஜா மலர்கள், கார்னேசன் மற்றும் செவ்வந்தி மலர்களை கொண்டு அலங்காரங்களும் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்காக பெங்களூரு, ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்து கார்னேசன் மலர்கள் ஊட்டிக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. இது தவிர பல ஆயிரம் மலர்களை கொண்டு 10 அலங்கார வளைவுகள், ரங்கோலி அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை கவரும் வகையில் வனவிலங்குகளின் உருவங்கள், கார்ட்டுன் பொம்மைகளும் மலர்களால் உருவாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படுகிறது. 

தோட்டக்கலைத்துறை சார்பில் மலர்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முக்கிய கண்காட்சி பொருட்கள் கொண்டு வரப்பட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு மலர் கண்காட்சியின் சிறப்பு நிகழ்வாக கண்காட்சி தொடங்கும் இன்று மற்றும் நிறைவடையும் நாளான 20-ம் தேதி ஆகிய 2 நாட்கள் லேசர் லைட் ஷோ நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

தற்போது மலர் கண்காட்சிக்காக மேடை அமைத்தல், அரங்குகள் அமை த்தல், பணிகள் நடந்து வருகிறது. கார்னேசன் மலர்களை கொண்டு அலங்காரங்கள் அமைப்பதற்காக இரும்பு கம்பிகள் மூலம் ரயில் உள்ளிட்டவைகளின் வடிவங்களும் அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் பூங்காவில் செய்யப்பட்டுள்ளது. இதே போல் ஊட்டி விஜயநகரம் பகுதியில் அமைந்துள்ள ரோஜா பூங்காவில் இன்று ரோஜா கண்காட்சியும் தொடங்குகிறது.

4200-க்கும் மேற்பட்ட ரகங்களில் உள்ள 32 ஆயிரம் பல வண்ண ரோஜா செடிகள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தயார் நிலையில் உள்ளன. இ-பாஸ் நடைமுறை யால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து உள்ள நிலையில், மலர் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சி தொடங்குவதால் வரக்கூடிய நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து