முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சம் பேர் எழுதிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: இணையதளம் - மொபைல் மூலம் அறிந்து கொள்ளலாம்

வியாழக்கிழமை, 9 மே 2024      தமிழகம்
10th-Exam 2023-04-06

சென்னை, தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி இன்று காலை வெளியாகிறது. தேர்வு முடிவுகள் உடனடியாக அந்தந்த மாணவர்களின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும், தேர்வுத்துறையின் இணைய தளங்களிலும் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

9 லட்சம் பேர்...

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடந்து முடிந்தன. முன்னதாக பத்தாம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 23ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடந்தன. பத்தாம் வகுப்புக்கான தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியில் 12,616 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். 

தனித் தேர்வர்கள்... 

இவர்களில் 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 ஆண்களும், 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 பெண்களும், மாற்றுப் பாலினத்தவர் ஒருவரும் அடங்குவர். இவர்களைத் தவிர தனித் தேர்வர்களாக 28 ஆயிரத்து 827 பேர் தேர்வு எழுதினர். ஏப்ரல் 10ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் 20 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக திருத்தும் பணிகள் முடிந்து மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்கள் தயாரிக்கும் பணிகள் நடந்து முடிந்தன.

காலை 9.30 மணிக்கு...

இதனையடுத்து திட்டமிட்டபடி, இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 10) அன்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in/ ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

ஆட்சியர் அலுவலகத்தில்...

தேர்வர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

கைப்பேசி எண்ணுக்கும்...

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து