முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

88-வது ஆண்டாக காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து வரும் 12-ம் தேதி நீர் திறப்பு: முதல்வர் வருகையையொட்டி ஆயத்தப் பணிகள் தீவிரம்

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சேலம் : மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க ஆயத்தப் பணிகள் துவங்கி உள்ளன. 

மேட்டூர் அணை பாசனம் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.  ஆண்டுதோறும் ஜூன் 12- ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். மேட்டூர் அணையின் நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இல்லாத காரணத்தால் 60 ஆண்டுகள் தாமதமாக டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  அணையின் நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இருந்ததால் 10 ஆண்டுகள் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று முன்கூட்டியே மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை வரலாற்றில் இதுவரை 17 ஆண்டுகள் குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ல் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு 18-வது ஆண்டாக குறிப்பிட்ட நாளில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவுள்ளது. 

நடப்பு ஆண்டில் மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதாலும் பருவமழையை எதிர்நோக்கியும் வரும் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் 12-ம் தேதி மேட்டூருக்கு வருகை தருகிறார்.

இதனையொட்டி மேட்டூர் அணையில் ஆயத்தப் பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் துவங்கி உள்ளன. மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கி பகுதியில் வர்ணம் தீட்டும் பணிகளும் மேல்மட்ட மதகு பகுதியில் மதகுகளின் இயக்கங்களும் சரிபார்க்கப்படுகிறது. மேல்மட்ட மதகு பகுதியில் மேடை அமைக்கப்பட்டு அங்கிருந்து மின் விசையை இயக்குவதன் மூலம் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். பின்னர் அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையங்கள் மூலமாக பாசனத்திற்கான தண்ணீர் வெளியேற்றப்படும். 

அப்போது இந்த மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி துவங்கும். துவக்கத்தில் வினாடிக்கு 3,000 கனஅடி வீதம் திறக்கப்படும் நீரின் அளவு பின்னர் தேவைக்கு ஏற்ப அதிகரிக்கப்படும். மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டால் அணை மின் நிலையம், சுரங்க மின்நிலையம் மற்றும் 7 கதவணைகளில் மின் உற்பத்தி துவங்கும்.

முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வருகை தருவதால் மேடை அமைக்கும் இடம் பத்திரிக்கையாளர்கள் சந்திக்கும் இடங்களில் பாதுகாப்பு ஏற்படுகள் குறித்து மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் முதல்கட்டமாக பார்வையிட்டார். நேற்று காலை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 96.83 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 492 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 750 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 60.80 டி.எம்.சியாக உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து