அணியில் இணைந்த ரிஷப் பன்ட்

Rishabh-Pant-22-07-2021 0

Source: provided

அணியில் இணைந்த ரிஷப் பன்ட்

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி தற்போது தர்ஹாமில் இங்கிலாந்தின் கவுண்ட்டி அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. கடந்த வாரம் இந்திய வீரர் ரிஷப் பன்ட்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதனையடுத்து அவருக்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. 

இதன் காரணமாக தர்ஹாம் சென்ற இந்திய அணியினருடன் பயிற்சி ஆட்டத்தில் அவரால் விளையாட முடியாமல் போனது. ஆனால் தர்ஹாமில் இருக்கும் ஹோட்டலில் ரிஷப் பன்ட் 10 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டார். இதனையடுத்து மீண்டும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்திய அணியினருடன் ரிஷப் பன்ட் இணைந்துள்ளார். இனி அவர் மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொள்வார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

____________

சுரேஷ் ரெய்னா கருத்தால் சர்ச்சை

தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் வர்ணனை மேற்கொண்ட சுரேஷ் ரெய்னா ‘நான் ஒரு பிராமின்’ என்று கூறியது சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. மேலும் சென்னை கலாச்சாரத்தையே அவர் பிராமண அடையாளத்துடன் கொண்டு சேர்த்தார் என்று அவர் மீது தற்போது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வர்ணனையில் இருந்த ரெய்னாவிடம் அவர் சிஎஸ்கே அணிக்காக பல ஆண்டுகள் ஆடியதால் சென்னையுடனான உங்கள் தொடர்பு என்ன என்று கேட்கப்பட்டது, அதற்கு அவர் “ஆம், நானும் பிராமின் தான் என்று நினைக்கிறேன். நான் 2004 முதல் சென்னையில் ஆடிவருகிறேன். எனக்கு இந்த கலாச்சாரம் பிடித்துள்ளது. 

__________

மிக்கி ஆர்தருக்கு கண்டனம்

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டிக்கு பின், இலங்கை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் போட்டி முடிந்தபின் மைதானத்தில் நின்றிருந்த கேப்டன் சனகாவுடன் வந்து ஏதோ பேசினார். இருவருக்கும் இடையிலான பேச்சு சில வினாடிகளில் வாக்குவாதமாக மாறியது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் சூடாகப் பேசியது அவர்களின் முகபாவனையில் தெரிந்தது. 

அப்போது பயிற்சியாளர் ஆர்தரைப் பார்த்து கேப்டன் சனகா கோபமாக ஏதோ பேச, உடனே அவர் அங்கிருந்து புறப்பட்டு ஓய்வறைக்குச் சென்றுவிட்டார்.  கிரிக்கெட் அணியை வழிநடத்துவது அணியின் கேப்டனே, பயிற்சியாளர் என்பவர் உத்தி வகுப்பு எடுக்கலாமே தவிர மைதானத்தில் கேப்டனின் முடிவுகளில் அவர் தலையிட முடியாது. இதுதான் வழக்கம், ஆனால் இலங்கை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் இந்த நயநாகரிகத்தை மீறி களத்திலேயே இலங்கை கேப்டன் சனகாவுடன் வாக்குவாதம் புரிந்தது கடும் கண்டனங்களைக் கிளப்பியது.___________

ஜப்பான் பிரதமர் சூகா மறுப்பு

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கொடுத்த நெருக்கடியினால்தான் கொரோனா அச்சுறுத்தலைப் புறக்கணித்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நடத்துகிறது ஜப்பான் என்ற செய்திகளை ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சூகா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

“நாங்கள்தான் நடத்துகிறோம் என்று கையை உயர்த்தினோம், ஏனெனில் நாங்கள் நடத்த விரும்பினோம், யாரும் என் மீது எதையும் வலியத் திணிக்க முடியாது அப்படி அவர்கள் திணித்தால் நான் திருப்பி அடிக்கக் கூடிய நபர் என்பது அனைவருக்கும் தெரியும்.” என்றார் பிரதமர் சூகா.

____________

ஷிகர் தவன் முன்னேற்றம்

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ஷிகர் தவன் ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் எடுத்ததன் மூலம், சர்வதேச தரவரிசைப் பட்டியலில் கூடுதல் புள்ளிகளை பெற்றுள்ளார். 712 புள்ளிகளுடன் இரண்டு இடங்கள் முன்னேறி 16வது இடத்தை அவர் பிடித்துள்ளார். 

கேப்டன் விராட் கோலி 848 புள்ளிகளுடன் தொடர்ந்து இரண்டாவது இடத்திலும், ரோஹித் ஷர்மா 817 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அஸாம் 873 புள்ளிகளை குவித்து முதலிடத்தில் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து