உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பதவி: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

appavu 2021 07 03

Source: provided

சென்னை : உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. அண்ணா பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் எனப்படும் ஆட்சி மன்றக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆக.13-ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 14-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, பட்ஜெட் மீதான பொது விவாதம், பதிலுரை நடைபெற்றது. தொடர்ந்து, ஒவ்வொரு துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இந்நிலையில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வகையில் புதிய மசோதாவை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து தாக்கல் செய்தார்.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தொடரில், அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆட்சி மன்றக்குழு உறுப்பினராக சேப்பாக்கம்/ திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவதாக, சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். அலுவல் சாரா உறுப்பினராக உதயநிதி 3 ஆண்டுகளுக்கு இருப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. சிந்தனைச் செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்களாக எம்.எல்.ஏ.க்கள் ஈஸ்வரன், கணேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து