குலாப் புயலில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவு

Jaganmohan 2021 09 28

குலாப் புயலில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதி வழங்க ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

வங்க கடலில் உருவான குலாப் புயல், ஞாயிற்றுக்கிழமை இரவு, ஆந்திர மாநிலம், விஜயநகரம் - தெற்கு ஒடிசா இடையே, கலிங்கப்பட்டினம் துறைமுகம் அருகே கரையை கடந்தது. இதில் ஆந்திராவின் கடலோர மாவட்டங்களான ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம், கோதாவரி மாவட்டங்களில் புயலின் தாக்கம் அதிகமாக இருந்தது. சுமார் 120 கி.மீ. வேகத்தில் புயல் வீசியதால் இந்த மாவட்டங்களில் பயிர்கள் நாசமடைந்தன.

இப்புயல் கரையை கடந்தாலும் இரு மாநிலங்களிலும் தொடர்ந்து மழைக்கு வாய்ப்புள்ளதாக விசாகப்பட்டினம் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையொட்டி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடலோர மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

 

அப்போது, “தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும். அவர்களுக்கு தேவையான உணவு, மருந்து போன்றவற்றை வழங்க வேண்டும்.புயலால் பாதிக்கப் பட்டுள்ள இடங்களில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளை செய்யவேண்டும். புயலால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்க வேண்டும்” என அவர் உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து