முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கள் வான்பரப்பில் சீனாவின் 38 படை விமானங்கள் ஊடுருவல் : தைவான் புகார்

சனிக்கிழமை, 2 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

பெய்ஜிங் : தங்கள் வான் பாதுகாப்பு மண்டலத்தில், சீனாவின் 38 படை விமானங்கள் அத்துமீறிப் பறந்ததாகத் தைவான் கூறியுள்ளது. இதுவரை சீனா மேற்கொண்டவற்றிலேயே மிகப்பெரிய ஊடுருவல் இது என்றும் குறிப்பிட்டுள்ளது தைவான்.

தைவான் தனது மாகாணங்களில் ஒன்று என்று பார்க்கிறது சீனா. ஆனால் தைவானோ தன்னை ஒரு தனி நாடாக கருதுகிறது. கிட்டத்தட்ட ஓராண்டு காலமாகவே சீனப் படை விமானங்கள், தைவானுக்கு அருகில் வந்து அச்சுறுத்துவதாக தைவான் தொடர்ந்து புகார் கூறி வருகிறது.

அணு ஆயுதங்களை ஏவும் திறன் கொண்ட விமானங்கள் உள்ளிட்ட சீனப் பாதுகாப்புப் படை விமானங்கள் தைவான் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தில் இரு அலைகளாக பறந்ததாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

சீன ராணுவத்தின் 25 விமானங்கள், பகல் நேரத்தில் தைவானின் ப்ராடாஸ் தீவின் பவளப்பாறை பகுதிக்கு அருகில், தென் மேற்கு வான் பாதுகாப்பு எல்லை பகுதிக்குள் நுழைந்ததாக, தைவானின் பாதுகாப்பு அமைச்சக செய்தியறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 13 சீன ராணுவ விமானங்கள் அதே பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை பிலிப்பைன்ஸ் மற்றும் தைவானுக்கு நடுவில் பறந்தன. இதை தன் ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளது தைவானின் பாதுகாப்பு அமைச்சகம்.

சீனா பாதுகாப்புப் படை விமானங்கள் தங்கள் வான் பாதுகாப்பு மண்டலத்தில் நுழைந்ததற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தங்கள் படை விமானங்களையும், ஏவுகணை அமைப்புகளையும் உடனடியாக பறக்கவிட உத்தரவிட்டது தைவான்.

"சீனா தொடர்ந்து படை ஆக்கிரமிப்புகளில் ஈடுபடுவது, அப்பிராந்தியத்தின் அமைதியை குலைக்கிறது" என தைவானின் பிரீமியர் சு ட்செங் சங் செய்தியாளர்களிடம் கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக சீனா இதுவரை பொதுவெளியில் எதையும் கூறவில்லை. இதுபோன்ற படை நடவடிக்கைகள் தன் இறையாண்மையைப் பாதுகாக்கவும், தைவான் மற்றும் அமெரிக்க கூட்டுச்சதியை இலக்கு வைக்கவும் நடத்தப்படுவதாக இதற்கு முன் சீனா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து