முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திறப்பது குறித்த அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளது: தமிழகத்தில் நர்சரி, அங்கன்வாடி பள்ளிகள் திறப்பது எப்போது? - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

சனிக்கிழமை, 16 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் நர்சரி பள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் தெளிவான அறிக்கை வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நிருபர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-

நவம்பர் 1-ம் தேதி முதல் மழலையர் நர்சரி மற்றும் அங்கன்வாடி பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி அளித்து தமிழக உத்தரவு வெளியிடப்பட்டது. இந்நிலையில், தற்போது இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் துன்புறுத்தக்கூடாது. பாகுபாடு காட்டக் கூடாது. மாணவர்களை துன்புறுத்தும் ஆசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா இருந்தாலும், இல்லாவிட்டாலும் கல்வி தொலைக்காட்சி எப்பொழுதும் போல தொடர்ந்து இயங்கும்.

தமிழகம் முழுவதும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு நடைபெற்றதை போல, பள்ளி ஆசிரியர்களுக்கு 'ஜீரோ கவுன்சிலிங்' நடத்த வாய்ப்பில்லை. ஆசிரியர்களுக்கு நடத்தவிருக்கும் கவுன்சிலிங் குறித்த கொள்கைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா காலத்தில் ஆசிரியர்கள் பணியின்போது உயிரிழந்திருந்தால், அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்க முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

நீட் தேர்வு சம்பந்தமாக ஏற்கனவே பயிற்சிகள் வழங்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. அது சம்பந்தமாக துறை அமைச்சர் சுப்பிரமணியன் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். குழந்தைகளை எந்த விதத்திலும் குழப்பாமல் சட்டப் போராட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், அதற்காக யாரும் படிக்காமல் இருந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அதற்கென சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்னும் வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் என்ன செய்ய வேண்டுமோ அதையும் செய்யும்.

நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளது. முதலமைச்சருடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்துணவு கொடுப்பது குறித்த கட்டாயம் பற்றியும், அவர்களை வரவழைப்பது குறித்தும் தான் விவாதித்தோம். ஆனால் அறிவிப்பில் நர்சரி, கிண்டர்கார்டன் பள்ளிகளும் இணைந்து வந்துள்ளது. இது குறித்த தெளிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து