முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர்கள் ஆய்வு

திங்கட்கிழமை, 18 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  மற்றும் இந்து சமயம் மற்றும்  றநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று சென்னை பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். 

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் மா. சுப்பிரமணியன்   செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில், சென்னை மாநகருக்கு புதியதாக ஒரு வாகனம் பல் மருத்துவச் சேவைக்கென்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இரண்டு இருக்கைகள் கொண்ட இந்த வாகனத்தில் இரண்டு மருத்துவர்கள் மற்றும் இரண்டு செவிலியர்கள் இடம்பெற்றிருப்பார்கள். இவர்கள் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சென்னையின் பல்வேறு இடங்களுக்குச் சென்று மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தைப் போல மக்களைத் தேடி பல் மருத்துவம் என்கிற வகையில் மருத்துவ சேவையை வழங்க உள்ளனர். 

வரும் நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிற நிலையில், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் அனுமதியைப் பெற்று, பள்ளி மாணவர்களுக்கும் இந்த பல் மருத்துவ சேவை வழங்க இருக்கின்றனர். இன்று முதல் இந்த பல் மருத்துவ சேவை வழங்கும் பணி தொடங்குகிறது.

கடந்த 2006-2011ஆம் ஆண்டு வரை சென்னை மாநகராட்சியில் தி.மு.கழக நிர்வாகத்தில் இருந்தபோது, சென்னையின் பல்வேறு இடங்களுக்கு பல் மருத்துவ சேவை வழங்கப்பட்டது. அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பல் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, தேவையான பல் மருத்துவ உபகரணங்களும் இலவசமாக வழங்கப்பட்டது. பல ஆண்டுகளாக அந்தத் திட்டம் செயல்பாட்டில் இல்லை. இப்போது தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி இத்திட்டம் மீண்டும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் சென்னை மாநகர மக்கள் மட்டுமல்ல. பள்ளி மாணவர்களும் பயன்பெற இருக்கின்றனர். இத்திட்டம் எந்த வகையில் பயன்படுகிறது என்று அறிந்தபிறகு கூடுதல் வாகனங்கள் வாங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இந்த பல் மருத்துவக்கல்லூரியில் 100 இளங்கலை, 40 முதுநிலை பல் மருத்துவத்திற்கான மாணவர் சேர்க்கை உள்ளது. இம்மருத்துவக் கல்லூரியின் முதல்வர்  ஏற்கனவே கூடுதல் கட்டடங்கள் தேவை என்று கோரிக்கை வைத்துள்ளார். தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுச்சென்று கூடுதல் கட்டடங்களை அமைத்துக்கொடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் இரண்டு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. ஒன்று சென்னை பல் மருத்துவக் கல்லூரி. மற்றொன்று சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியாகும். எந்தெந்த மாவட்டங்களில் எல்லாம் பல் மருத்துவக் கல்லூரி தேவை இருக்கிறது என்று கண்டறிந்து, தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று அவற்றை நிறைவேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை கொரோனாத் தடுப்பூசி செலுத்துவதற்கு விடுமுறை அளிக்கப்பட்டது. காரணம் பண்டிகை நாட்களாக இருந்ததாலும், தொடர்ந்து மருத்துவ அலுவலர்களால் தடுப்பூசிப் பணிகள் நடைபெற்று வந்ததாலும், விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த மாதத் தொகுப்பிற்கு தேவையான தடுப்பூசிகள் மத்திய அரசிடமிருந்து வரத் தொடங்கியுள்ளது. தமிழகம் தடுப்பூசி செலுத்துவதைப் பாராட்டி தடுப்பூசிகளை விரைந்து வழங்கி வருகின்றனர். 

தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி இதுவரை நடத்தப்பட்ட மாபெரும் தடுப்பூசி முகாம்கள் மூலம் பல லட்சம் பேர் பயன் அடையதுள்ளனர். நியூசிலாந்தில் ஒரே நாளில் 1 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக ஒரு செய்தி வெளிவந்திருந்தது. ஆனால் தமிழகத்தில் ஒரே நாளில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் கொரோனாத் தடுப்பூசி முகாம்களில் போடப்பட்டுள்ளன.

இதுவரை நடைபெற்ற மருத்துவ முகாம்களை விட கூடுதலான மருத்துவ முகாம்கள் அனைவரும் பயன்அடையும் விதமாக 50 ஆயிரம் முகாம்கள் மூலம் மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசிகள் செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கடந்த வாரங்களைப் போல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறாமல், வரும் சனிக்கிழமை அன்று நடத்தப்படும் என்று அமைச்சர்  தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து