முக்கிய செய்திகள்

அரசியலுக்கு வந்தது ஏன்? துரை வைகோ விளக்கம்

Durai-2021-10-20

அரசியலுக்கு வந்தது ஏன்? என்பது குறித்து துரை வைகோ விளக்கம் அளித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் ம.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளார் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு

கேள்வி: அரசியலில் நான்பட்ட அவமானங்களை எனது மகன் படக்கூடாது என்று வைகோ கூறினார். ஆனால், உங்களை தலைமைக் கழகச் செயலாளராக நியமித்துள்ளாரே, இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன?

பதில்: கடந்த சட்டமன்றத் தேர்தலில் ம.தி.மு.க.விற்கு 6 தொகுதிகளை ஒதுக்கினார்கள். அப்போது நான் சாத்தூர் தொகுதியில் போட்டியிடுவதாக இருந்தது. இது ஊடக நண்பர்களுக்குத் தெரியும். நான் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்று தி.மு.க. தலைமையும் அதன் நிர்வாகிகளும் பேசினார்கள்.

அதேபோல் கே.கே.எஸ்.எஸ்.ஆர். கூட என்னுடன் தொடர்பு கொண்டு, என்னப்பா சாத்தூரில் நீ நிற்கவில்லையா? யார் நிற்கிறது என்றெல்லாம் கேட்டார்கள். ஆமா அண்ணாச்சி நான் நிற்கவில்லை என்று கூறினேன். ரொம்ப வருத்தப்பட்டார். துரைக்குதான் சாத்தூர் தொகுதியை விட்டுக் கொடுத்தோம் தயவு செய்து அவர் நிற்க வேண்டும் என தந்தையிடம் கோரிக்கை வைத்தார்கள்.

நான் பட்ட கஷ்டத்தை என் மகன் படவேண்டாம் என்று அப்பா சொன்னது உண்மைதான். அரசியல் வாழ்க்கை என்பது நச்சு நிறைந்தது என்று எனக்கு நன்றாகத் தெரியும். தலைவர் வைகோ உடல் ஆரோக்கியத்துடன் தான் இருக்கிறார். ஆனால், இந்த கொரோனா காலத்தில் அவரால் பல இடங்களுக்கு போக முடியவில்லை. அதனால் நிர்வாகிகளின் நல்லது கெட்டதுக்கு நான் போயிருக்கேன். அப்படி இயக்கத் தோழர்களின் நிகழ்ச்சிகளுக்கு போகும்போது, அவர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீரைப் பார்த்தேன்.

சோகமான நிகழ்ச்சிக்கு போகும்போது சொந்த அண்ணன் தம்பிபோல என்னை கட்டிப்பிடித்து அழுகிறார்கள். அப்போதுதான் இந்த இயக்கத்திற்காகவும் வைகோவுக்காகவும் இவ்வளவு உணர்வுப்பூர்வமாக இருக்கிறார்களே என்பதை நான் உணர்ந்துள்ளேன். இதையடுத்து நிர்வாகிகள் நிர்பந்தம் மூலம் என்னை அரசியலுக்கு வரவேண்டும் என்று அழைத்தார்கள். அப்பா பட்ட கஷ்டம் போதாதா எனக்கு பயிற்சி போதாது என்னை ஏன் அரசியலுக்கு அழைக்கின்றீர்கள் என்று பலமுறை கேட்டுள்ளேன்.

அப்பா மட்டும்தான் கஷ்டப்பட்டாரா நாங்கள் கஷ்டப்படவில்லையா, கட்சிக்காக சொத்து சுகங்களையெல்லாம் இழந்திருக்கிறோம். நீங்கள் எங்களுக்கு என்ன பதில் சொல்றீங்க என பலமுறை கடந்த 3 வருடங்களாக என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் மனஉளைச்சலில் இருந்தேன்.

அரசியலில் எந்த பயிற்சியும் இல்லாமல் நாம் எப்படி பொது வாழ்க்கையில் செயல்பட போகிறோம். அதற்கான திறமை நம்மிடம் இருக்கிறதா என பல கேள்விகளை எனக்கு நானே கேட்டு சுய பரிசோதனை செய்துள்ளேன். எனக்காக அல்ல எனது குடும்பத்துக்காக அல்ல ம.தி.மு.க. என்ற இயக்கத்திற்காக நான் இந்த முடிவை எடுக்க வேண்டிய நிர்பந்தத்தால் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.

 

என்று பதிலளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து