முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரைத்துறையில் வாழ்நாள் சாதனை - மத்திய அரசின் உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருது பெற்றார் நடிகர் ரஜினிகாந்த் : துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு வழங்கினார்

திங்கட்கிழமை, 25 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : திரைத்துறையில் வாழ்நாள் சாதனைகாக நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருதை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார்.

திரைத்துறையில் நீண்ட காலம் புகழுடன் பணியாற்றுபவர்களை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் இந்த விருதை இந்தி திரையுல உலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் அமிதாப்பச்சன் ஏற்கனவே பெற்றுள்ளார். மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கும், இயக்குனர் பாலச்சந்தருக்கும் இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் ரஜினிகாந்துக்கு 2019-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. கொரோனா நோய் பரவல் காரணமாக இந்த விருதை அவருக்கு வழங்க முடியாத நிலை இருந்தது.

இந்நிலையில் டெல்லியில் நேற்று தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தாதாசாகேப் பால்கே விருதை ரஜினிகாந்துக்கு வழங்கினார். திரையுலகில் ரஜினிகாந்த் நிகழ்த்தியுள்ள வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், முருகன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்றவர்கள் ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

முன்னதாக விருது வழங்குவதற்கு முன் ரஜினிகாந்த குறித்த ப்ரோமோ வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அந்த வீடியோவில் நடிகர்கள் அமிதாப்பச்சன், மோகன்லால், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகை குஷ்பூ, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்ளிட்டோர் ரஜினிகாந்தை பாராட்டி பேசினர். 

விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது., மத்திய அரசாங்கம் எனக்கு வழங்கியுள்ள திரை உலகின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதினை என்னை உருவாக்கிய என்னுடைய குருநாதர் கே.பாலச்சந்தர் சார் அவர்களுக்கும் , என்னுடைய அண்ணன் சத்தியநாராயண ராவ் கெய்க்வாட் அவர்களுக்கும் , என்னுடைய நண்பர் ராஜ் பகதூர் அவர்களுக்கும், என்னுடைய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் ,இயக்குனர்கள் ,தொழில்நுட்ப கலைஞர்கள், சக நடிகர்கள் ,விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் என்னுடைய ரசிகர்கள் மற்றும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.

4-வது திரைப்படக் கலைஞர்

தாதாசாகேப் பால்கே விருதை பெற்றுள்ள 4-வது தமிழ்த் திரைப்படக் கலைஞர் என்கிற பெருமை ரஜினிகாந்த்துக்குக் கிடைத்துள்ளது. சத்யஜித் ரே, பிருத்விராஜ் கபூர், நாகிரெட்டி, எல்.வி. பிரசாத், ராஜ்கபூர், லதா மங்கேஷ்கர், சிவாஜி கணேசன், கே. பாலசந்தர்,  கே. விஸ்வநாத் உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்கள் பலரின் புகழுக்கு தாதா சாகேப் விருது மேலும் பெருமை சேர்த்துள்ளது. கடைசியாக 2018-ல் பிரபல நடிகர் அமிதாப் பச்சனுக்கு பால்கே விருது அளிக்கப்பட்டது. 

2019-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது ரஜினிகாந்துக்குச் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்தியத் திரைத்துறையில் ரஜினியின் சாதனையைப் பாராட்டி இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 1982-ல் எல்.வி. பிரசாத் பால்கே விருதைப் பெற்றார். 1996-ல் சிவாஜி கணேசனுக்கும் 2010-ல் கே.பாலசந்தருக்கும் இந்த விருது அளிக்கப்பட்டது. இதையடுத்து பால்கே விருதைப் பெற்றுள்ள 4-வது தமிழ்த் திரைப்படக் கலைஞர் என்கிற பெருமை ரஜினிகாந்த்துக்குக் கிடைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து