முக்கிய செய்திகள்

சென்னையில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீர் உடனடியாக அகற்றப்பட்டு வருகிறது: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தகவல்

சனிக்கிழமை, 27 நவம்பர் 2021      தமிழகம்
KKSSR 2021 11 27

சென்னையில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீர் உடனடியாக அகற்றப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தெரிவித்தார். மேலும் செங்கல்பட்டில் தேசிய பேரிடர் மீட்புப் படை தயார் நிலையில் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் கூறியதாவது, 

 தமிழகத்தில் 25.10.2021 முதல் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்,  37 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் மாநில சராசரி 21.98 மி.மீ. ஆகும்.  முக்கிய நீர்த்தேக்கங்களிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையின் 2 குழுக்கள், செங்கல்பட்டு மாவட்டத்திலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு குழுவும் மீட்பு பணிகளை மேற்கொள்ள நிலை நிறுத்தப்பட்டுள்ளன. 

திருவாரூர் மாவட்டத்தில், பழவங்குடி கிராமத்தில் 7 குடும்பங்கள் ஆதிதிராவிடர் ஆரம்பப் பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 30 நபர்கள் இதுவரை தாழ்வான பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் உள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம் வட்டத்தில், முன்னெச்சரிக்கையாக 200 நபர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் மழை நீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 100 குடும்பங்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினம், திருச்செந்தூர் சாத்தான்குளம் பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடம்பா ஏரியில் ஏற்பட்டுள்ள சிறிய உடைப்பு உடனே சரிசெய்யப்பட்டுள்ளது. மேலும், வேலூர் மற்றும் தாமிரபரணி அடிச்சநல்லூரில் ஏற்பட்ட உடைப்புகளும் நேற்று முன்தினம் இரவு சரிசெய்யப்பட்டு, கோரம்பள்ளம் ஏரிக்கு நீர் வரத்து குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு 204 மோட்டார்கள், 15 டாங்கர்கள் (Sullage Tanker) நீர் தேங்கியுள்ள பகுதிகளில், நீர் வெளியேற்ற பயன்படுத்தப்படுகிறது.     சென்னை வடக்கில், 12 பகுதிகளிலும், சென்னை தெற்கில், 8 பகுதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளதால் மின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.  இவ்விடங்களில், மழை நீரை வெளியேற்றும் பணி பெருநகர சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை தவிர ஏனைய மாவட்டங்களில், 7 பகுதிகளில், மழை நீர் தேங்கியுள்ளதால் மின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.  இவ்விடங்களில், மழை நீரை வெளியேற்றும் பணி மாவட்ட நிருவாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் 653 நபர்கள் 6 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில், அரியலூர் (1), திருநெல்வேலி (1),  திருப்பூர் (1) மாவட்டங்களில் 3 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.  344 கால்நடை இறப்பு பதிவாகியுள்ளது. 2075 குடிசைகள் பகுதியாகவும், 130 குடிசைகள் முழுமையாகவும், ஆக மொத்தம் 2205 குடிசைகளும், 272 வீடுகள் பகுதியாகவும், ஒரு வீடு முழுமையாகவும், ஆக மொத்தம் 273 வீடுகள் சேதமடைந்துள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சியில்  மழை நீர் தேங்கியுள்ள 220 பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர், அதிக திறன் கொண்ட பம்புகள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து