முக்கிய செய்திகள்

நியூசி.க்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா சிறப்பான தொடக்கம்: முதல் நாள் முடிவில் 221 ரன்கள் சதம் விளாசிய மயங்க் அகர்வால்

வெள்ளிக்கிழமை, 3 டிசம்பர் 2021      விளையாட்டு
Agarwal- 2021 12 03

நியூசிலாந்துக்கு எதிராக மும்பையில் நேற்று தொடங்கிய 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை கொடுத்துள்ளது. இந்திய அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 221 ரன்களை எடுத்துள்ளது.

கோலி திரும்பினார்...

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இரு அணிகளும் மோதிய கான்பூர் டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து அணி போராடி 'டிரா' செய்தது. இந்நிலையில் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் இரண்டாவது டெஸ்ட்டை எதிர்நோக்கியுள்ளன. நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதல் டெஸ்ட்டில் ஓய்வில் இருந்த கேப்டன் விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

தாமதமானது...

மும்பையில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது. இதனால், போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. 9 மணிக்கு போடப்பட வேண்டிய டாஸ் இரண்டரை மணி நேரம் தாமதமானது. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் இருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக டாம் லேதம் கேப்டனாக செயல்படுகிறார்.

இந்திய அணி:

சும்பன் கில், மயாங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சாஹா, அஷ்வின், ஜெயந்த் யாதவ், அக்ஸர் படேல், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.

நியூசிலாந்து அணி: 

வில் யங், டாம் லேதம், மிட்செல், டெய்லர், ஹென்ரி நிக்கோல்ஸ், டாம் பிளண்டல், ரச்சின் ரவீந்திரா, ஜேமிசன், டிம் செளதீ, நீல் வாக்னர், அஜாஸ் படேல்.

புஜாரா, கோலி...

ரகானே, ஜடேஜா, இஷாந்த் சர்மா ஆகியோர் இந்திய அணியில் இடம் பெறவில்லை. மயங்க் அகர்வால், ஷூப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஷூப்மான் கில் 44 ரன்னில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அடுத்து வந்த புஜாரா, விராட் கோலி டக்அவுட்டில் வெளியேறினர். இதனால் இந்திய அணி 90 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

மயங்க அகர்வால்...

4-வது விக்கெட்டுக்கு மயங்க் அகர்வால் உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் மயங்க் அகர்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 119 பந்தில் அரைசதம் அடித்தார். ஷ்ரேயாஸ் அய்யர் 18 ரன்னில் வெளியேறினார். இருந்தாலும் இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தது. 5-வது விக்கெட்டுக்கு மயங்க் அகர்வால் உடன் சகா ஜோடி சேர்ந்தார்.

சதம் அடித்தார்...

மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி அரைசதத்தை சதமாக மாற்றினார். அவர் 196 பந்தில் 13 பவுண்டரி, 3 சிக்சருடன் சதம் அடித்தார். முதல் டெஸ்டில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இந்திய அணியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் சதம் விளாசி விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

221 ரன்கள் ....

இதற்கிடையே இந்தியா முதல்நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் அடித்துள்ளது. மயங்க் அகர்வால் 120 ரன்களுடனும், சகா 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணியில் அஜாஸ் பட்டேல் நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து