முக்கிய செய்திகள்

பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு: சீக்கிய அமைப்பு பொறுப்பேற்பு

புதன்கிழமை, 12 ஜனவரி 2022      இந்தியா
pm-modi-car-2022-01-06

பஞ்சாபில் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாட்டுக்கு அமெரிக்காவில் இருந்து செயல்படும் சீக்கிய தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

கடந்த வாரம் பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி, சாலை வழியே காரில் செல்ல முயன்றபோது போராட்டம் காரணமாக அவரது கார் 20 நிமிடங்களுக்கும் மேல்நின்றது. பின்னர், பயணத்தை ரத்து செய்துவிட்டு மோடி டெல்லிதிரும்பினார். பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாட்டுக்கும் போராட்டத்துக்கும் அமெரிக்காவில் இருந்து செயல்படும் ‘நீதிக்கான சீக்கியர்கள்’ என்ற சீக்கிய தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

கடந்த திங்கட்கிழமையன்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் 50 முதல் 60 பேருக்கு இங்கிலாந்து எண்ணில் இருந்து செல்போன் அழைப்பு வந்தது. அதில் பதிவு செய்யப்பட்ட பேச்சில் ஒருவர் தன்னை ‘நீதிக்கான சீக்கியர்கள்’ அமைப்பைச் சேர்ந்தவர் என்று கூறி பேசியிருப்பதாவது:

பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாட்டுக்கு நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு பொறுப்பேற்கிறது. மோடியின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரதமர் மோடியின் ஆட்சிக்கு உதவ வேண்டாம். பஞ்சாப் விவசாயிகள் மீது வழக்கு போடுவதற்கும் உதவ வேண்டாம். 1984-ல் நடந்த சீக்கியர் படுகொலை சம்பவத்தில் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. இன்று நீங்கள் மோடிக்கு உதவினால் அது மிகவும் இழிவான செயலாக இருக்கும்.இவ்வாறு அந்த நபர் பேசியுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து