முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயிர்சேத நிவாரணத் தொகை ரூ. 97.92 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தகவல்

வியாழக்கிழமை, 20 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

வட கிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான நிவாரண தொகை ரூ. 97.92 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் பயிர் சேதமடைந்தது. டெல்டா மாவட்டங்களில் பயிர் சேத நிலையை ஆய்வு செய்த அமைச்சர்கள் குழு, விவசாயிகளின் கருத்தைக் கேட்டறிந்தது. மேலும், முதல்வர் டெல்டா மாவட்டங்களையும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட பயிர் சேத நிலையையும் நேரில் ஆய்வு செய்தார்.

இந்நிலையில் பயிர்சேதங்கள் குறித்த அறிக்கையினை அமைச்சர்கள் குழு தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்தது. 

இந்நிலையில் அக்டோபர் 25 முதல் டிசம்பர் 11 -ம் தேதி வரை தொடர் மழையிருந்ததால் பயிர் சேத மதிப்பீடு செய்வதில் தடங்கல் ஏற்பட்டது. டிசம்பர் மாதம் 11-ம் தேதிக்கு பிறகு பாதிக்கப்பட்ட அனைத்து பயிர்களின் விபரம் கணக்கெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பயிர்பாதிப்பு கணக்கெடுப்பின் அடிப்படையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் சேதமடைந்த 4,44,988 ஏக்கர் பரப்பளவிற்குரிய 3,16,837 விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையாக ரூ.168 கோடியே 35 லட்சம்  முதல்வரால் விடுவிக்கப்பட்டது. பயிர் நிவாரணத் தொகை அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு 06.01.2022 அன்று வழங்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து விவசாயிகளின் வங்கிக் கணக்கு எண் மற்றும் வங்கி விபரங்களை சரிபார்க்கும் பணி முடிவடைந்து மாவட்ட கலெக்டர்கள் மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைத்திடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், வங்கிகளின் தொடர் விடுமுறை காரணமாகவும், நிவாரண நிதி விடுவிப்பதில் சிறு தடங்கல் ஏற்பட்டது. 

தற்போது வரை சேதமடைந்த வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு நிவாரணமாக ரூ.97.92 கோடி 2,23,788 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய விவசாயிகளுக்கு நிவாரண நிதி விடுவிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில்   இரண்டு நாட்களில் வரவு வைக்கப்படும் என அமைச்சர்  எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து