முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் ஷவர்மா உணவை தடை செய்வது குறித்து ஆய்வு : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 8 மே 2022      தமிழகம்
Ma Subramanian 2022 05 08

Source: provided

சேலம் : தமிழகத்தில் ஷவர்மா உணவை தடை செய்வது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் நேற்று 29-வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. சேலம் அஸ்தம்பட்டி அருகில் உள்ள சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக்கில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். 

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, 

ஏற்காடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய வசதி செய்து தர பொதுமக்கள் கேட்டுள்ளனர். இதை தொடர்ந்து ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பில் ஏற்காட்டில் பிரேத பரிசோதனை கூடம் கட்டப்பட உள்ளது. இதற்கான இடத்தை ஏற்காட்டில் பார்வையிட்டேன். இந்த பணி ஒரு மாத காலத்தில் தொடங்கப்படும்.

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் தமிழகத்தில் 56 ஆயிரம் பேர் விபத்தில் சிக்கியவர்கள் காப்பாற்றப்பட்டு உள்ளனர். பலரும் பயன் அடைந்து உள்ளனர்.சேலம் மாவட்டத்தில் புதிதாக 38 மருத்துவமனைகள் வர உள்ளது. எந்த பகுதிக்கு அதிகம் மருத்துவ வசதி தேவைப்படுகிறதோ அங்கு இவை அமைக்கப்படும்.ஷவர்மா சாப்பிட்டு கேரளாவில் ஒருவர் இறந்து உள்ளார்.

இது மேலை நாடு உணவு. அங்கு கெடாது. இங்கு உள்ள காலநிலைக்கு இந்த உணவு உடனே கெட்டு விடும். இளைஞர்கள் அதிகம் இதை சாப்பிடுகிறார்கள். இதனால் நிறைய கடைகள் வருகிறது. இந்த உணவை பதப்படுத்த முடியுமா? என தெரியாமல் விற்கிறார்கள். இதனால் தமிழகம் முழுவதும் 1000ம் கடைகளில் ஆய்வு செய்து அபராதம் விதித்து உள்ளோம். மக்கள் நம் உணவுகளை சாப்பிட வேண்டும். ஷவர்மா உணவை தடை செய்வது குறித்து ஆய்வு செய்தும் வருகிறோம்.மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் மருந்து சாப்பிடக் கூடாது.

மருத்துவமனைகளுக்கு வந்து மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று மருந்து சாப்பிட வேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து வந்த மாணவர்களால் கொரோனா தொற்று ஏற்பட்டது. இப்போது தொற்று இல்லை. கடந்த 24 மணி நேரத்தில் 100 பேருக்கு மட்டுமே தொற்று வந்து உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே கேரளாவில் தக்காளி வைரஸ் பரவி வருகிறது. இது தமிழகத்தில் பரவ வாய்ப்பு உள்ளதா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

அது சாதாரண வைரஸ்தான். குழந்தைகளின் கன்னத்தில் தக்காளி போன்று பாதிப்பை ஏற்படுத்துவதால் அதை தக்காளி வைரஸ் என்கிறார்கள். மற்றபடி தக்காளிக்கும் வைரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இதற்கு சாதாரணமான ஷிரப் குடித்தாலே சரியாகிவிடும். இது தமிழகத்தில் பரவ வாய்ப்பு இல்லை. இதுபற்றி சுகாதாரத்துறை செயலாளர்  கேரள அதிகாரிகளிடம் பேசி அந்த வைரஸ் பற்றி கேட்டறிந்து உள்ளார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து