முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 5 மே 2024      தமிழகம்
Thirumavalavan 2023 07 30

Source: provided

திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்துவது போல் அமைந்துள்ளது என்று திருமாவளவன் தெரிவித்தார். 

திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

விழுப்புரம் பாராளுமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்கு எந்திரங்களை வைக்கப்பட்ட இடத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் அரை மணி நேரம் செயலிழந்து உள்ளது. இது பற்றி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் தேர்தல் அலுவலரிடத்தில் புகார் மனு அளித்துள்ளார். 

இதே போல நீலகிரி, ஈரோடு பகுதிகளில் சி.சி.டி.வி. கேமரா செயல் இழந்துள்ளது சந்தேகத்திற்கு இடமான சில குளறுபடிகள் நடந்துள்ளன. அரியலூரில் வைக்கப்பட்டுள்ள சிதம்பரம் தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்களை விடுதலை சிறுத்தை கட்சியினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

அந்தந்த தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் சி.சி.டி.வி. எந்திரங்களை கண்காணிக்க வேண்டும். சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அவைகளை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். 

பிரதமர் மோடி சமீபகாலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்துவது போல் அமைந்துள்ளது.

அவருடைய நிலையை மறந்து பொறுப்பை மறந்து மிகவும் கீழிறங்கி போய் அவருடைய விமர்சனங்களை முன் வைக்கிறார். குறிப்பாக தாலியை பறித்து இஸ்லாமியருக்கு கொடுத்து விடுவார் என்ற அளவுக்கு அவர் பேசுவது அவரது பொறுப்புக்கு அழகல்ல. அது அச்சத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

வருகிற 9-ம் தேதி ஆந்திராவில் உள்ள நெல்லூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளேன். எங்களது வேட்பாளர்கள் ஆந்திராவில் போட்டியிடுகின்றனர். நாங்கள் போட்டியிடாத மற்ற தொகுதிகளில் நான் பிரச்சாரம் மேற்கொள்கிறேன்.

இதே போல் மகராஷ்டிராவில் தாராவில் போட்டியிடுகிற காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன். மகராஷ்டிராவில் லத்தூர் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேட்பாளர் போட்டியிடுகிறார்.

தெலுங்கானாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் 7 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். அங்கு பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறேன். இதுவரையில் அரசியல் வரலாற்றிலேயே டெல்லி முதல்வர்  கெஜ்ரிவாலை நேரடியாக அமலாக்கத்துறை கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும். 

அதே போல ஹேமந்த்சோரன் பொறுப்புள்ள பதவியில் இருக்கிறார். அவரையும் சிறை பிடித்துள்ளனர். இது தவறான ஒரு தவறான முன் மாதிரி என்று அரசியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். நாடு எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது. 

இது அமலாக்கதுறையினரின் அதிகாரப் போக்கை வெளிப்படுத்துகிறது. இதனால் இண்டியா கூட்டணிக்கு எந்த பின்னடைவும் ஏற்படாது. தேசிய ஜனநாயக கூட்டணிக்குதான் இதனால் பின்னடைவு ஏற்படும். டெல்லியில் எல்லா தொகுதிகளும் காங்கிரஸ், ஆம்ஆத்மி கூட்டணி கைப்பற்றும். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து