முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: வலுவான நிலையில் இந்திய அணி சதம் விளாசிய ரிஷப் பண்ட் - ஜடேஜா

சனிக்கிழமை, 2 ஜூலை 2022      விளையாட்டு
Jadeja-Rishab-Bund 2022 07

Source: provided

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளது.

சுற்றுப்பயணம்... 

இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. கடந்த வருடம் ரத்தான 5-வது டெஸ்ட், இப்போது நடைபெறுகிறது. ரோஹித் சர்மா கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பும்ரா இந்திய அணியின் கேப்டனாகச் செயல்படுகிறார். பிர்மிங்கமில் நடைபெறும் 5-வது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் ஷர்துல் தாக்குர், ஜடேஜா, விஹாரி, புஜாரா ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். அஸ்வினுக்கு இந்தமுறையும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

முதல் நாள் முடிவில்...

முதல் நாள் முடிவில் இந்திய அணி, 73 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்களுடன் தடுமாறியபோது ரிஷப் பந்தும் ஜடேஜாவும் அருமையான கூட்டணியை அமைத்தார்கள். ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி 89 பந்துகளில் சதமடித்தார். அதன்பிறகும் நன்கு விளையாடி 111 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகளுடன் 146 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பந்தும் ஜடேஜாவும் 6-வது விக்கெட்டுக்கு 239 பந்துகளில் 222 ரன்கள் கூட்டணி அமைத்தார்கள். ஜடேஜா 109 பந்துகளில் அரை சதமெடுத்தார். முதல் நாள் முடிவில் ஜடேஜா 83 ரன்களுடனும் ஷமி ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தார்கள்.

ஜடேஜா - ஷமி கூட்டணி...

இந்நிலையில் நேற்று முன்தினம் ஜடேஜா - ஷமி கூட்டணி பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை நன்கு எதிர்கொண்டார் ஷமி. இதனால் ஜடேஜாவால் இயல்பாக விளையாட முடிந்தது. ரசிகர்கள் எதிர்பார்த்தபடி சதத்தைப் பூர்த்தி செய்தார். 183 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் சதமடித்தார் ஜடேஜா. இது அவருடைய 3-வது டெஸ்ட் சதம்.

ரவீந்திர ஜடேஜா சதம்....

31 பந்துகளை எதிர்கொண்ட ஷமி, 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஜடேஜாவும் 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் - 375/9. கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பும்ராவும் சிராஜும் குறைந்தது 10 ரன்களாவது எடுக்க வேண்டும் என இந்திய ரசிகர்கள் விரும்பினார்கள். ஆனால் நடந்தது வேறு.

84-வது ஓவரில்... 

பிராட் வீசிய 84-வது ஓவரில் எதிர்பாராதது நிகழ்ந்தது. அந்த ஓவரில் பும்ரா 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடித்தார். இது தவிர நோ பால், வைட் என அந்த ஓவரில் நம்பமுடியாத அளவுக்கு 35 ரன்கள் கிடைத்தன. டெஸ்ட் வரலாற்றில் எந்த ஒரு பந்துவீச்சாளரும் (பிராட்) 35 ரன்கள் கொடுத்தது கிடையாது. அதேபோல டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த ஒரு பேட்டரும் (பும்ரா) ஒரு ஓவரில் 29 ரன்கள் எடுத்தது கிடையாது. 

416 ரன்களுக்கு...

சிராஜ் 2 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸ்சில் 416 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. கேப்டன் பும்ரா 16 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 98/5 என்கிற நிலையில் இருந்த இந்தியா பிறகு ரிஷப் பந்த், ஜடேஜாவின் அற்புத சதங்களாலும் பும்ராவின் கடைசிக்கட்ட அதிரடி ஆட்டத்தினாலும் கெளரவமான ஸ்கோரைப் பெற்றுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!