முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம்: தமிழக அரசின் வழிகாட்டுதல்கள் வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 9 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2022-01-22

Source: provided

சென்னை : உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கும் திட்டம் குறித்த வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் உயர்கல்வி உறுதி திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இதனடிப்படையில், 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் கல்லூரி,பாலிடெக்னிக் அல்லது ஐடிஐயில் சேர்ந்து படிக்கும்போது அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சமூக நலத்துறை செயலர் ஷம்பு கல்லோலிகர் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது;-

"உயர்கல்வி உறுதித் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான வடிவமைப்பு, வங்கிக் கணக்கில் பணம் செலுத்துதல், பயனாளிகளின் தகுதி, தொகை, திட்ட மேலாண்மை, மாநில, மாவட்ட அளவிலான குழுக்கள், ஒற்றைச் சாளர சேவை உள்ளிட்டவை குறித்த உத்தரவுகளை பிறப்பிக்கும்படி சமூக நலத்துறை இயக்குநர் அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட அரசு, இயக்குநரின் கருத்துரு தொடர்பான உத்தரவை வெளியிட்டுள்ளது.

மூவலூர் ராமாமிர்தம் திருமண நிதியுதவித் திட்டம், உயர்கல்வி உறுதித் திட்டமாக மாற்றப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும். இத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு அதிகாரியாக சமூக நலத்துறை இயக்குநர் நியமிக்கப்படுகிறார்.

இத்திட்டம் முழுமையாக ஆன்லைன் வழியாக செயல்படுத்தப்படுகிறது. ஆன்லைன் உள்ளிட்ட வசதிகளை மின்னாளுமை நிறுவனம் பராமரிக்கும். 6 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவிகள் அரசுப் பள்ளியில் படித்துள்ளார்களா என்பதை பள்ளிக்கல்வித் துறை ஆய்வு செய்யும். உயர்கல்வித் துறை, விண்ணப்பங்களை பெற்று வழங்கும்.

அத்துடன், மாணவிகளுக்கு டெபாசிட் தொகை இல்லாத வங்கிக் கணக்குகளை தொடங்கவும், 6 மாதங்களுக்கு ஒருமுறை, அதாவது ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் மாணவிகள் உயர்கல்வியில் தொடர்கிறார்களா என்பதையும் சரிபார்த்து சான்றளிக்கும். மாதந்தோறும் 7-ம் தேதி பயனாளியின் வங்கிக் கணக்குக்கு ரூ.1,000 அனுப்புவதற்கான உத்தரவுகளை சமூக நலத்துறை இயக்குநர் பிறப்பிப்பார்.

இத்திட்டத்தை கண்காணிக்க, தலைமைச் செயலர் தலைமையில் மாநில அளவிலான கண்காணிப்புக் குழுவும், மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்படுகிறது. மேலும், மாநில திட்ட மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டு திட்டம் கண்காணிக் கப்படுகிறது.

வழிகாட்டுதல்கள்;-

1) 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து, தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட தமிழகத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தும். மேலும், அரசுப் பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை முடித்து டிப்ளமோ, ஐடிஐ படிப்புகளில் சேர்ந்தவர்களுக்கும் இத்திட்டம் பொருந்தும்.

2) வேறு மாநிலத்தில் இருந்து எல்லை தாண்டி வந்து படிக்கும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது.

3) உயர்கல்வி என்றால் கலை மற்றும் அறிவியல், தொழிற்கல்வி படிப்புகள், பாராமெடிக்கல், பட்டயம், ஐடிஐ, ஒருங்கிணைந்த முதுநிலைக் கல்வி என அனைத்துக்கும் பொருந்தும்.

4) முதல் உயர்கல்விக்கு மட்டுமே உதவித்தொகை பெற முடியும். ஒருங்கிணைந்த முதுநிலைக் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும். தொலைநிலைக் கல்வியிலும், அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களிலும் உயர்கல்வி பயின்றால் இத்திட்டத்தில் பயன்பெற இயலாது.

5) பாலிடெக்னிக் படிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள், ஐடிஐ சான்றிதழ் படிப்புகளுக்கு குறைந்தபட்சம் ஓராண்டு, கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு 3 ஆண்டுகள், பொறியியல் படிப்புக்கு 4 ஆண்டுகள், வேளாண் படிப்புகளுக்கு 4 ஆண்டுகள், மருத்துவப் படிப்புக்கு 5 ஆண்டுகள், சட்டம் மற்றும் பாரா மெடிக்கல் படிப்புகளுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை உதவித்தொகை பெறமுடியும்.

6) அரசுப் பள்ளிகளில் இருந்து வெளியேறும் மாணவிகளில் யார் உயர்கல்வி பயில்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

7) உதவித்தொகையை பெற ஆதார் எண் கட்டாயம்.

8) பயன்பெற விரும்பும் தகுதியான மாணவிகள், தாங்களாகவே ஆன்லைனில் பதிவு செய்யலாம் அல்லது கல்லூரி வாயிலாக பதிவு செய்யலாம். இத்திட்டம் தொடர்பான தகவல்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு ஆன்லைன் மூலம் தகவல்களை பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து