முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டப்பிரிவு 370 ரத்துக்கு எதிரான மனுக்கள்: தசரா விடுமுறைக்கு பிறகு விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2022      இந்தியா
Supreme-Court 2021 07 19

Source: provided

புதுடெல்லி, : ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்கள் தசரா விடுமுறைக்குப் பின் விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ, மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இதை எதிர்த்து பல்வேறு தரப்பினர், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரமணா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று அப்போதைய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்தார்.

வழக்கை விசாரித்த 5 நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி ரமணா, தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்று சமீபத்தில் ஓய்வு பெற்றார். மற்றொரு நீதிபதியான சுபாஷ் ரெட்டியும் ஓய்வு பெற்றுவிட்டார். 5 நீதிபதிகளில் 2 நீதிபதிகள் ஓய்வு பெற்றதை அடுத்து, பழைய அமர்வு களைக்கப்பட்டு புதிய அமர்வு உருவாக்கப்பட்டது. தற்போதைய தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் தலைமையிலான இந்த புதிய அமர்வு, வழக்கை விசாரிக்க உள்ளது. இதில், நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எஸ். ரவீந்திர பட் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த அமர்வு, இந்த வழக்கை எப்போது விசாரிக்கும் என்பது இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், தற்போது தசரா விடுமுறைக்குப் பிறகு விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் அமர்வு அறிவித்துள்ளது. அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து, வழக்கை பட்டியலிடுமாறு மனுதாரர்கள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கை நிச்சயம் பட்டியலிடுவோம் என தெரிவித்தனர்.

முன்னதாக, இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட மிகப் பெரிய அமர்வு விசாரிக்க உத்தரவிடுமாறு மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், அதனை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கை விசாரிக்கும் என்று தெரிவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து