முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 மாநில சட்டசபை தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வழிபாட்டு தலங்களை பிரச்சாரத்துக்கு பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது : மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணையம் கடிதம்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜனவரி 2023      இந்தியா
Election-Commission 2023-01

Source: provided

புதுடெல்லி : வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதோடு, தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27 ஆம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், மார்ச் 2-ஆம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தோ்தல் பிரச்சாரக் களமாக வழிபாட்டுத் தலங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தோ்தல் அதிகாரிகளுக்கு அண்மையில் தோ்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, 

தோ்தல் பிரச்சார களமாக வழிபாட்டுத் தலங்களை எந்த வகையிலும் பயன்படுத்துவதை தோ்தல் நடத்தை விதிமுறை பிரிவுகள் தடை செய்துள்ளன. இது தொடா்பாக கடந்த 2012-ம் ஆண்டு தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.  மேலும் வழிபாட்டுத் தலங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் சட்ட பிரிவுகள், எந்தவொரு அரசியல் சிந்தனை அல்லது அரசியல் செயல்பாட்டை பிரபலப்படுத்தவும் பிரச்சாரம் செய்யவும், அரசியல் கட்சிகள் பலனடையவும் வழிபாட்டுத் தலங்கள், அவற்றின் நிதி ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கிறது. 

இந்தப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை மீறினால், அபராதத்துடன் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும். எனவே தோ்தல் பிரசாரக் களமாக வழிபாட்டுத் தலங்களைப் பயன்படுத்தக் கூடாது.  இது தொடா்பாக அனைத்து மாவட்ட தோ்தல் அதிகாரிகள், தோ்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதன் மூலம் சட்டத்தை மீறுவோா் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இதுகுறித்த தோ்தல் நடத்தை விதிமுறைகள், வழிபாட்டுத் தலங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் சட்டப் பிரிவுகளை அரசியல் கட்சிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தக் கடிதத்தின் நகல் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய மற்றும் மாநில கட்சிகளின் தலைவா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து