முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனது இன்ஸ்டா பக்கம் முடங்கியது: மெஸ்ஸி

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2023      விளையாட்டு
Messi 2023 02 01

Source: provided

அர்ஜென்டினாவின் கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி. இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிக ஃபாலோயர்களை பெற்ற உலக பிரபலங்களில் மெஸ்ஸியும் ஒருவர். உலகக் கோப்பையுடன் அவர் கொடுத்திருந்த உற்சாக போஸ் இன்ஸ்டாவில் அதிக லைக்குகளை அள்ளி இருந்தது. கடந்த டிசம்பர் மாதம் பிரான்ஸ் அணியுடன் அர்ஜென்டினா இறுதிப் போட்டியில் விளையாடியது. பெனால்டி ஷூட் அவுட் முறையில் பிரான்ஸை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா வீழ்த்தி இருந்தது. இந்தத் தொடரில் சிறந்த வீரருக்கான தங்கப் பந்து விருதை மெஸ்ஸி வென்றார். மொத்தம் 7 கோல்களை அவர் உலகக் கோப்பை 2022 தொடரில் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், அவர் அண்மையில் பண்பலை ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில்தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு முடங்கியதாக தெரிவித்துள்ளார். “எனது இன்ஸ்டாகிராம் பக்கம் உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு அப்படியே சில நாட்களுக்கு முடங்கி இருந்தது. அதற்கு காரணம் எனக்கு குவிந்த மெசேஜ்கள். மில்லியன் கணக்கில் இன்ஸ்டாவில் எனக்கு மெசேஜ் வந்திருந்தது. அதுதான் அதற்கு காரணம். அதே போல எனது இன்ஸ்டா கணக்கை நான்தான் நிர்வகித்து வருகிறேன். அதை நிர்வகிக்க தனியாக யாரையும் நான் பணி அமர்த்தவில்லை. எந்தவொரு நிறுவனமும் எனது கணக்கை நிர்வகிக்கவில்லை” என மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

________________

ரஹானே புதிய கவுன்டி அணியில் இணைகிறார்

ரஞ்சி கோப்பைப் போட்டியில் ஹைதரபாத் அணிக்கு எதிராக இரட்டைச் சதமும் அஸ்ஸாமுக்கு எதிராக 191 ரன்களும் எடுத்தார் ரஹானே. 7 ஆட்டங்களில் 634 ரன்கள் எடுத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் கடைசியாக 2022 ஜனவரியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடினார். 2020 டிசம்பரில் கோலி இல்லாத இந்திய அணியை வழிநடத்தி மெல்போர்னில் சதமடித்து இந்திய அணி வெற்றி பெற உதவினார். சதமடித்த மெல்போர்ன் டெஸ்டுக்குப் பிறகு ரஹானே விளையாடிய 28 இன்னிங்ஸில் 3 அரை சதம் மட்டுமே எடுத்தார். எனினும் 34 வயது ரஹானே, ரஞ்சி கோப்பை ஆட்டங்களில் தொடர்ந்து விளையாடி தேர்வுக்குழுவினரின் கவனத்தை ஈர்க்க முயல்கிறார்.

கடந்த ஓராண்டாக இந்திய அணியில் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டில் விளையாட முடிவெடுத்துள்ளார் ரஹானே. லீசெஸ்டர்ஷைர் அணிக்காக கவுன்டி சாம்பியன்ஷிப் ஆட்டங்களிலும் 50 ஓவர் போட்டியிலும் விளையாடவுள்ளார். ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ரஹானே, ஜூன் மாதம் முதல் லீசெஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடுவார்.  இந்தப் பருவத்தில் லீசெஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடுவதில் மகிழ்ச்சி. புதிய அணி வீரர்களுடன் இணைந்து விளையாடுவதை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன் என்றார். இதற்கு முன்பு ஹாம்ப்ஷைர் கவுன்டி அணியில் விளையாடியுள்ளார் ரஹானே. 

________________

எலும்பு முறிவால் இடது கையில் பேட் செய்த ஹனுமா விஹாரி..!

ஆந்திர அணி, இந்தூரில் மத்திய பிரதேச அணிக்கு எதிராக ரஞ்சிக் கோப்பை காலிறுதியில் விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆந்திரா 379 ரன்கள் குவித்துள்ளது. இந்தப் போட்டி நேற்று முன்தினம் துவங்கியது. விஹாரி, பேட் செய்த போது ஆவேஷ் கான் வீசிய பந்து அவரது மணிக்கட்டை தாக்கியது. அவர் வலியை பொறுத்துக் கொண்டு பேட் செய்ய முயன்றார். இருந்தும் 37 பந்துகளில் 16 ரன்கள் எடுத்த போது ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்ததில் எலும்பு முறிவு உறுதி செய்திருந்தது. 

அந்த அணிக்காக ரிக்கி பூஹி மற்றும் கரண் ஷிண்டே ஆகியோர் சதம் விளாசி இருந்தனர். முதல் இன்னிங்ஸில் அந்த அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 353 ரன்கள் எடுத்திருந்த போது விஹாரி பேட் செய்ய வந்தார். வழக்கமாக அவர் வலது கையால் பேட் செய்வார். ஆனால், காயம் காரணமாக அவர் இடது கையால் பேட் செய்திருந்தார். கிட்டத்தட்ட ஒரு கையால் பேட்டை பிடித்தபடி விளையாடி இருந்தார். அந்த நிலையிலும் ஆவேஷ் கான் வீசிய பந்தில் ஒரு பவுண்டரி விளாசி அசத்தி இருந்தார். குமார் கார்த்திகேயா பந்து வீச்சில் ஸ்வீப் ஷாட்டும் ஆடி இருந்தார். 57 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து அவர் சர்நேஷ் ஜெயின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

________________

ஐபிஎல்லில் இப்படி நடக்காது: உ.பி. கிரிக்கெட் சங்கம் உறுதி

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20யை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பாண்டியா தலைமையிலான இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி. சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான இந்த ஆடுகளம் அதிர்ச்சியளிக்கிறது என்றார் பாண்டியா. அந்த ஆட்டத்தில் வீசப்பட்ட 40 ஓவர்களில் 30 ஓவர்களைச் சுழற்பந்து வீச்சாளர்கள் தான் வீசினார்கள். மேலும் எந்த ஒரு பேட்டராலும் ஒரு சிக்ஸரும் அடிக்க முடியவில்லை. 

இந்நிலையில் உத்தரப் பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஒரு பேட்டியில் கூறியதாவது: லக்னோ மைதானத்தைக் கவனித்துள்ள இரு நிபுணர்களைப் பணியில் அமர்த்தப் போகிறோம். ஒருவர் ஆடுகளத்தையும் மற்றொருவர் மைதானத்தின் தன்மைகளையும் கவனித்துக்கொள்வார்கள். அவர்களுடைய சேவையைப் பெற இதர கிரிக்கெட் சங்கங்களின் அனுமதியைப் பெறவுள்ளோம் என்று கூறியுள்ளார். அதேபோல ஆடுகள வடிவமைப்பாளரை நீக்கியதையும் அவர் உறுதி செய்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து