முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தைப்பூச திருவிழா: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் குவிந்த பக்தர்கள்

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2023      ஆன்மிகம்
Palani 2023 02 05

Source: provided

சென்னை : தைப்பூச திருவிழா நேற்று முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த தைப்பூச திருவிழாவையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 

இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த வாரம் முருகன் ஆலயங்களில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது.  முருகப் பெருமானின் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா ஜனவரி 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது.  விழாவில் தினமும் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, தந்தப் பல்லக்கு, தங்க மயில் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் கடந்த வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி மணக்கோலத்தில் வெள்ளித்தேரில் வீதி உலா வந்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. முன்னதாக காலை 5 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி தோளுக்கினியானில் சண்முக நதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து, காலை 11 மணிக்கு மேல் மேஷ லக்னத்தில் சுவாமி தேரில் எழுந்தருளினார். சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மாலை 4.30 மணிக்கு விநாயகர் மற்றும் வீரபாகு சுவாமி தேர்கள் முன் செல்ல வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி தேரை அரோகரோ முழக்கத்துடன் நான்கு ரத வீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா நேற்று  நடைபெற்றது.  சுப்பிரமணிசாமியின் வேலுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. மேள தாளம் முழங்க கடலுக்கு கொண்டு வரப்பட்ட முருகப்பெருமானின் வேலுக்கு கடலில் தீர்த்தவாரி நடைபெற்றது.  தைப்பூசத்தன்று சுவாமி தரிசனம் செய்வதற்காக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். 

தென்காசி மாவட்டம் கடையம் என்ற பகுதி அருகே அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவில் அந்த பகுதி மக்கள் மத்தியில் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. சிவன் பார்வதி திருமணம் இமயமலையில் நடந்த போது அந்த திருமணத்திற்கு காண்பதற்கு முனிவர்கள், தேவர்கள் குவிந்தனர். இதனால் வடபகுதி தாழ்ந்து தென்பகுதி உயர்ந்தது  

இதனை அடுத்து சமநிலையை அடைய அகத்தியர் தென்பகுதிக்கு வந்தார். அந்த இடம்தான் தோரணமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஒவ்வொரு வருடமும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நேற்று  தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.  

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.  சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை, மருதமலை, வயலூர், எட்டுக்குடி முருகன் ஆலயங்களிலும் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. 

வெளிநாடுகளில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் தைப்பூசம் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் அலகு குத்தியும் காவடிகள் சுமந்து வந்தும் முருகப்பெருமானை வழிபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து