முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: பட்ஜெட்டில் ரூ.22,562 கோடி ஒதுக்கீடு

திங்கட்கிழமை, 20 மார்ச் 2023      தமிழகம்
Budget-1 2023 03 20

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், 2023-24 ஆம் ஆண்டில், 35 கோடி வேலை நாட்கள் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இம்மதிப்பீடுகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 22,562 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். அப்போது ஊரக வளர்ச்சித்துறை தொடர்பான திட்டங்களையும், அதற்கான நிதி ஓதுக்கீட்டு விவரங்களையும் அவர் அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:

அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10,000 கி.மீ. சாலைகளின் தரத்தை மேம்படுத்தி, ஊரகப்பகுதிகளில் சிறப்பான சாலை வசதிகளையும், பொருளாதார மேம்பாட்டையும் உறுதிசெய்திட, முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தை அரசு இவ்வாண்டு தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், முக்கியமான இணைப்புச் சாலைகள், பேருந்துகள் இயங்கும் சாலைகள் தரம் உயர்த்தப்படும். வரும் நிதியாண்டில், 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5,145 கி.மீ. சாலைகளுக்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

கிராமப்புரங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில், 6,618 நீர்நிலைகளில் மொத்தம் 638 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளில், மேலும், 10,000 சிறிய நீர் நிலைகள், குளங்கள், ஊரணிகள் 800 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும்.

வீட்டுவரி, தொழில் வரி, குடிநீர் வரியை ஊராட்சிகளுக்கு இணையவழியில் எளிதில் செலுத்துவதற்கு ஒரு வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில், கட்டட வரைபடம், மனை வரைபட அனுமதிகளையும் இணைய வழியில் பெற வழிவகை செய்யப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், இவ்வாண்டு இதுவரை, 10,914 கோடி ரூபாய் செலவில் 30.87 கோடி வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2023-24 ஆம் ஆண்டில், இத்திட்டத்தின் கீழ், 35 கோடி வேலை நாட்கள் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இம்மதிப்பீடுகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு ரூ.22,562 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து