முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம், திரௌபதி அம்மன் கோயில் விவகாரம்: கோட்டாட்சியர் முன் ஆஜராகி இரு தரப்பினரும் எழுத்துபூர்வ விளக்கம்

வெள்ளிக்கிழமை, 9 ஜூன் 2023      ஆன்மிகம்      தமிழகம்
Villupuram 2023 06 07

விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீதர்மராஜா திரௌபதி அம்மன் கோயிலில் வழிபாடு செய்வது தொடர்பாக, இருவேறு சமுதாய தரப்பினரும் கோட்டாட்சியர் முன் ஆஜராகி எழுத்துப் பூர்வமான விளக்கங்களை அளித்தனர்.

மேல்பாதி கிராமத்தில் பழைமைவாய்ந்த ஸ்ரீதர்மராஜா திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெற்ற திருவிழாவில் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வழிபட அனுமதிக்கப்படவில்லை. இதனால், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த இரு வேறு சமுதாய மக்களிடையே பிரச்னை உருவானது. தொடர்ந்து, கோயிலில் வழிபாடுகளை மேற்கொள்ள தங்களையும் அனுமதிக்க வேண்டும் எனக் கூறி, பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இருதரப்பைச் சேர்ந்தவர்களும் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியர் தலைமையில் 5 முறையும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் 3 முறையும் பல்வேறு கட்டங்களில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அதில் தீர்வு காணப்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில், வருவாய்க் கோட்டாட்சியரும் உள்கோட்ட நடுவருமான ரவிச்சந்திரன் தலைமையில் வருவாய்த் துறையினர் புதன்கிழமை ஸ்ரீதர்மராஜா திரௌபதி அம்மன் கோயிலை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.இது தொடர்பான அறிவிப்பும் கோயிலில் விளம்பரம் செய்யப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கோயிலுக்குப் போடப்பட்டது .

இதன் தொடர் நடவடிக்கையாக விழுப்புரம் உட்கோட்ட நடுவரும், வருவாய் கோட்டாட்சியருமான ச. ரவிச்சந்திரன் இரு தரப்பைச் சேர்ந்த 82 பேர்களுக்கு சம்மன் அனுப்பி, ஜூன் 9 ஆம் தேதி (நேற்று) நேரில் ஆரஜாகி உரிய விளக்கங்களை எழுத்துப் பூர்வமாக அளிக்கவேண்டும் என உத்தரவுப் பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அழைப்பின் பேரில் இரு தரப்பினரும் தனித்தனியாக வெள்ளிக்கிழமை வருவாய் கோட்டாட்சியர் சி.ரவிச்சந்திரன் முன்பு ஆஜராகி எழுத்துப் பூர்வமான விளக்கங்களை அளித்தனர். இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்டறிந்த வருவாய் கோட்டாட்சியர் கோயில் பிரச்னையில் தீர்வு  எட்டப்படும் வரை அமைதிக் காக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். விழுப்புரம் உட்கோட்டக்காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ். சுமேஷ் மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து