முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது : 4 மாநில தேர்தல் முடிவுகள் எதிரொலிக்கும்

ஞாயிற்றுக்கிழமை, 3 டிசம்பர் 2023      இந்தியா
Parliament 2023 05 27

Source: provided

புதுடெல்லி : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று கூடுகிறது. இந்த கூட்டத் தொடரில் நேற்று நடைபெற்ற 4 மாநில தேர்தல் முடிவுகள் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கூட்டத் தொடரில் 21 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் வருகிற 22-ம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

முன்னதாக இந்த கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த டெல்லியில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் 23 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். 

மொத்தம் 19 நாட்கள் நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில் 15 நாட்கள் அலுவல் நாட்களாக இருக்கும். இந்த 15 நாட்களில் மொத்தம் 21 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

இந்த கூட்டத்தொடர் தான் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 17-வது பாராளுமன்றத்தின் நிறைவு கூட்டத்தொடர் ஆகும். எனவே இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

4 மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகி இருக்கிறது. இது இன்று தொடங்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் எதிரொலிக்கும். இதன் காரணமாக பாரதிய ஜனதா, காங்கிரஸ் இடையே பாராளுமன்றத்தில் அனல் பறக்கும் வகையில் விவாதங்கள் நடைபெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

அது போல காஷ்மீர் சீரமைப்பு சட்டமசோதா, பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா, தபால் துறை சட்ட மசோதா போன்றவற்றிலும் ஆளுங்கட்சிகளுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. எனவே இந்த கூட்டத்தொடர் அனல் பறக்கும் வகையில் இருக்கும். 

பாராளுமன்றத்தில் இன்று திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.பி. மெகுபா மோய்த்ராவுக்கு எதிராக அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று தெரிகிறது. எம்.பி.க்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை குழு அளித்துள்ள அந்த அறிக்கை மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. 

பாராளுமன்றத்தில் கேள்வி கேட்க தொழில் அதிபர்களிடம் லஞ்சம் பெற்றதாக திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.பி. மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. அவரது பதவி பறிக்கப்படலாம் என்று கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியானது. இதன் காரணமாக இன்றைய கூட்டத்தில் அவர் மீது தாக்கல் செய்யப்படும் அறிக்கை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண் எம்.பி. பதவி பறிக்கப்பட்டால் பாராளுமன்ற கூட்டத்தொடரில் மேலும் அனல் பறக்கும் சூழ்நிலை உருவாகும் 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து